பக்கம் எண் :

74தமிழ் இந்தியா

வாணிகம்

  தமிழிலே வாணிகத் தொடர்பான சொற்கள் பல உண்டு. நிறைகோல், ஞெமன்கோல், தராசு, வட்டி, முதல், வாசி, கடை, அங்காடி, சந்தை என்பன அவற்றுட் சில. நெய்தல் மருத நிலங்களில் வாணிகம் தொடங்கியிருக்கலாம். உமணர் வயல்களில் பாத்தி கட்டி விளைவித்த உப்பைப் பொதிமாடுகளிலும் கழுதைகளிலும் கொண்டுசென்று இடங்கள் தோறும் விற்றனர். வாணிகம் வளர்ச்சியடைந்தபோது வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. உருளை, சூட்டு, ஆர், குறடு முதலியன வண்டியின் உறுப்புகளை உணர்த்தும் சில பெயர்கள். வாணிகம் செய்யும் செட்டிகள் பலர் இருந்தனர். வணிகருக்குச் சாத்தர் என்பதும் சங்க காலத்து வழங்கிய இன்னொரு பெயர். செட்டி என்னும் சொல் வடமொழியில் சிறெஸ்தி சிறஸ்தா எனத் திரிந்து வழங்கிற்று. வேதகாலத்தில், முத்து, பவளம், சந்தனக்கட்டை, மிளகு முதலியவைகளை வடநாட்டுக்குக் கொண்டு சென்று வியாபாரஞ் செய்தோர் பாணியர் எனப்பட்டனர். பாணியர் என்பது வணிகர் என்பதன் திரிபு என ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறியிருக்கின்றனர். சமக்கிருத பண்டிதர்கள் சமக்கிருதம் கடவுள் மொழியாயிருத்தலின் அது மனித மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற்றிருக்கமாட்டாது என்னும் குருட்டு நம்பிக்கையால் பிற மொழிகளினின்று சமக்கிருதத்துக்குச் சென்றுள்ள சொற்களுக்கு ஒவ்வாத சமக்கிருத உற்பத்தியைக் கற்பித்துக் கூறுவர்.1


  1. Sanskrit seholors suffer from a form of superiority complex and believe that sanskrit, the language of the gods being a perfect Language, could not stoop so low as to borrow words from the languages of men. Hence they are fond of inventing derivations, ingenious and plansible but absurd from a historical point of view. - Pre - aryan Tamil Culture.