வெண்கொற்றக் குடை விரிக்கும் கிரியை நடத்தப்பட்டது. நகர மாந்தர் நகரை அணி செய்தார்கள். இளவரசன் பட்டத்து யானைமீது நகர் வலம் வந்தான். அரசனது மனை நகரின் நடுவிலிருந்தது. அது ஏழு மாடிகள் அல்லது பல மாடிகளுடையது. தானியக்களஞ்சியமும் நிதியும் அரண்மனையிலிருந்தன. அரண்மனையின் பொது மண்டபம் மிகவும் விசாலமானது. வழக்குகளின் தீர்ப்பைப் பெறுவதற்கு அல்லது அங்கு நடக்கும் கொண்டாட்டங்களைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டமாகச் சென்றார்கள். நகரத்தில் நடக்கும் எல்லாவகைக் களியாட்டங்களையும் அரசன் பார்வையிட்டான். அரசன் தனது சுற்றத்தாரோடு மகிழ்ந்திருக்கும் மண்டபம் சந்தனம் பன்னீர் முதலியன தெளிக்கப்பெற்று நறுமணங் கமழ்ந்தது. அது பலவாறு அழகு செய்யப்பட்டிருந்தது. அரசிருக்கை மண்டபத்தில் அரசன் அமைச்சர்களாலும் நடனமாதராலும் சூழப்பட்டிருந்தான். அரசனது பள்ளியறை மாடிமீது இருந்தது. அதனிடத்தே அழகிய கட்டிலும் அதன்மீது அணைகளும் இடப்பட்டிருந்தன. அதன் அயலே சூதாடும் மண்டபம். அங்கு வெள்ளி நாற் காலிகளும் பொன் சூதாடு காய்களுமிருந்தன. அரசன் பொது மண்டபத்தே இருந்து மக்களின் வழக்குகளை உசாவித் தீர்ப்பு அளித்தனர். அரண்மனையைப் பெரியு மதில் சூழ்ந்திருந்தது. அங்கு 16,000 நடனமாதர் இருந்தனர். இளவரசரும் இளவரசியரும் உறைவதற்கு வெவ்வேறு மாளிகைகளிருந்தன. அட்டிற்சாலையில் மீன் இறைச்சி, சோறு, கஞ்சி முதலியன ஆக்கப்பட்டன. அச்சனுண்பதற்குச் செய்யப்படும் சமையல் நூறு வகையினது. |