பக்கம் எண் :

78தமிழ் இந்தியா

பூங்காவனம் பதினெட்டு முழம் உயர்ந்த மதிலாற் சூழப்பட்டது. அதன் ஒருபக்கத்தே பெரியகதவுகள் இருந்தன. அங்கு அரசனும் தேவியாரும் நீராடிக் களிக்கும் கேணியிருந்தது. அங்கு அவனுக்கென அமைக்கப்பட்ட இருக்கையில் அரசன் இருந்தான். அப்பொழுது அவனெதிரே நடன மாதர் நாட்டியம் ஆடினர். சிலர் இனிய வாத்தியங்களை ஒலித்தனர். வாத்தியங்களை இயக்கிப் பாடுதல் சிறந்த பொழுதுபோக்காகக் கருதப்பட்டது.


நால்வகைப் படைகள்

  அரசனிடத்தில் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகள் இருந்தன. தேர்களிற் பெரும்பாலும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டன. அவை மீதுவெள்ளைக் குடைகளும் பலநிறக் கொடிகளும் நாட்டப்பட்டிருந்தன. கைதேர்ந்த பாகன் தேரை யோட்டினான். அவன் கவசமணிந்து கையில் வில்லைப் பிடித்திருந்தான்.

  சில நேரங்களில் அரசனே படையை நடத்திச் சென்றான். அக்காலங்களில் அவன் யானை மீதிருந்து பகைவரைத் தாக்கினான். யானைகள் பெரும்பாலும் மதிற் கதவுகளைத் திறப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. அறபது வயது வந்ததும் உறுதியான கொம்புடையதுமாகிய யானை போருக்குச் சிறந்ததென கருதப்பட்டது. பாகர் குத்துக் கோலும் தோட்டியும் வைத்திருந்தார்கள். விளங்குகின்ற அணிகலன்களணிந்து வாளைக் கையிற்பிடித்த அரசர் யானை மீதிருந்தார்கள். வலிய மறவர் கொடிகளை வீசிக் கொண்டு பக்கத்தே இருந்தனர். யானைகளைப் பழக்குவதற்கெனத் தனி ஆட்கள் அரசனிடமிருந்தார்கள்.