ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் வாழ்ந்தோர் மீன்களை மிகுதியும் உண்டார்கள். மீன்களைப் பிடிப்பதற்கு வலை, தூண்டில், கூடு என்பன பயன்படுத்தப்பட்டன. அழகிய பட்டாடைகள் நெய்யப்பட்டன. அரசன் சரிகைத் தலைப்பாகை தரித்தான். பட்டத்து யானை சரிகைத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டது. மக்கள் பெரும்பாலும் பஞ்சு ஆடை உடுத்தார்கள். பெண்கள் பஞ்சுஆட்டி நூல்நூற்றனர். சீலை நெய்வோரும் சிலைகளுக்குச் சாய்ந்தோய்ப்போரும் இருந்தனர். பொன் வெள்ளி இரத்தினக்கல்லு முத்து முதலியவைகளால் அழகிய நகைகள் செய்யப்பட்டன. பொன் நகைகளுக்கு இரத்தினக்கல் பதிக்கப்பட்டது. வளையல், மோதிரம், மாலை, குண்டலம், மேகலை, தண்டை, கொண்டையூசி முதலிய பலவகை அணிகள் வழக்கிலிருந்தன. அரசன் அரண்மனையில் வெள்ளி தங்கக் கலங்களைப் பயன்படுத்தினான். நாற்காலிகள், படுக்கைகள், சிங்காதனங்கள் பொன்னழுத்தி நன்கு அழகு செய்யப்பட்டன. அழுத்தஞ் செய்யப்பட்ட உலோகத் தகடுகள் முகம்பார்க்கும் கண்ணாடிகளாகப் பயன்படுத்தப்பட்டன. உணவருந்தும் கலங்கள் வெள்ளியாற் செய்யப்பட்டன. பானை, தட்டு, சட்டி முதலியன செம்பு பித்தளை வெண்கலம் என்பவைகளாலானவை. இரும்பு உருக்கு ஆக்கப்பட்டு, அதனால் அரிவாள், உளி, நாவிதன்கத்தி, சுத்தியல், போர்க்கருவிகள், கவசம், ஊசி, இசைக்கருவிகளின் நரம்புகள் என்பன செய்யப்பட்டன. தந்தத்திலும் அரிய வேலைகள் செய்யப்பட்டன. குயவர் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள். இவர்கள் அழகிய சட்டி பானை சாடி முதலியன செய்தனர். கொத்தர் செங்கல்லினால் அழகிய |