வீதியை நோக்கியிருந்தன. கதவுகள் தாழிடப்பட்டன. பெரிய வீடுகள் சாந்துபூசி வெள்ளையடிக்கப்பட்டன. உல்லாச வாழ்க்கை மக்கள் உல்லாச வாழ்க்கையை விரும்பினர். ஆடவர் மயிரையும் தாடியையும் கத்தரித்து மட்டஞ்செய்தார்கள். பெண்கள் அழகிய நகைகளை அணிந்தனர்; மணப்பொருள்களையும் பூக்களையும் பெரிதும் பயன்படுத்தினர். பிராமணர் ஒழுக்கமுடைய பிராமணர் பெரிதும் மதிப்புப் பெற்றனர். உணவு அருந்தும்படி அவர்கள் வீடுகளுக்கு அழைக்கப்பட்டார்கள். நீராடியபின் அவர்கள் வீட்டுக்கு வந்து வீட்டுத்தலைவன் செம்பிற்கொடுக்கும் நீரை வாங்கி முகத்தைக் கழுவியபின் இருந்து உண்டார்கள். உண்டு முடிந்ததும் வீட்டுத் தலைவன் கொடுக்கும் தக்கணையைப் பெற்று மங்கலங் கூறிச் சென்றனர். உலகப்பிராமணர் என இன்னொரு வகையினர் இருந்தனர். இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் நில்லாதவர்கள். இவர்களுட் சிலர், மருத்துவராகவும், தூது போவோராகவும், வேளாண்மை செய்வோராகவும், ஆடு வளர்ப்போராகவும், வாய்ப்புக் கூறுவோராகவும், வாள், கோடரி, கேடகம், கண்டகோடரிகளைத் தாங்கி வியாபாரக் கூட்டங்களுக்குமுன் செல்வோராகவும் இருந்தனர். இவர்கள் தம் மகளிரைப் பொன்னுக்கு விற்பர்; தாம் விரும்பிய எத்தொழிலையும் புரிவர். சண்டாளர் முதலியோர் கூத்தாடிகளும் வாத்தியக்காரரும் கிராமங்கள் தோறும் சென்று கம்பங்கூத்து மாயவித்தை புரிந்தும், பாலையாட்டியும் பொருள்பெற்றனர். |