பாம்பாட்டிகளும் இவ்வாறே ஊர் ஊராகத் திரிந்தனர். சண்டாளர் நகர்ப்புறத்தே வாழ்ந்தனர். இவர்கள் தீண்டப்படாதவராவர். இவர்கள் தமக்குள் ஒருவகைக் குழூஉக்குறியைப் பேசினர். பிணஞ்சுடுதல் வீதிகளைப் பெருக்குதல் முதலிய வேலைகளை இவர்கள் புரிந்தனர். மகளிர் இசையும் நடனமும் மகளிர்க்குச் சிறந்த கல்விகளாகக் கருதப்பட்டன. சுயம்வரம், காந்தருவம், பெற்றோரால் ஒழுங்குசெய்யப்படுவது என மணம் மூவகைப்பட்டது. நல்ல முகூர்த்த வேளையில் மணமகன் பெண் வீட்டுக்கு வந்து பெண்ணை மணந்தான். அரசியர் அரசு குமாரியர் பிரபுக்களின் மகளிர் என்போர் மட்டும் மூடப்பட்ட வண்டிகளிற் சென்றார்கள். மகளிர் பட்டு, பஞ்சு, சணல் ஆடைகளை உடுத்தார்கள். மாலை, குண்டலம், காதோலை, மேகலை, கைவளை, கால்வளை, கடயம் போன்ற நகைகள் அணிந்து கொள்ளப்பட்டன. கூந்தல் பலவாறு வகிர்ந்து பின்னி முடிக்கப்பட்டது. நகங்கள் சிவப்பூட்டப்பட்டன. உயர் குடும்ப மகளிர் யானைத் தந்தக் கைப்பிடியுடைய முகம் பார்க்கும் கண்ணாடிகளையும், செருப்பையும் பயன்படுத்தினர். மேல்வகுப்புப் பெண்களைத் தவிர மற்றவர்கள் தமது வாழ்க்கையின் பொருட்டுப் பலவகை வேலைகளைச் செய்தனர். கிராமப் பெண் வயலைக் காவல்காத்தல், நெசவு தொடர்பான வேலைகள் போன்றவைகளைப் புரிந்தாள். சிலர் பூ விற்றனர். வறிய பெண்கள் வீடுகளில் வேலைக்காரியராகவும் தாதியராகவும் அமர்ந்தனர். நடன மாதர் பரத்தையர்களாக வாழ்ந்தனர். பிச்சை எடுத்து உண்ணும் பெண்துறவிகளும் இருந்தார்கள். |