ஒருவரை நிறைவாக ஒரு கருமத்தைச் செய்தால் அவன் முதுகிற் றட்டி அதன் மகிழ்ச்சி அறிவிக்கப்பட்டது. பெண்ணின் வலக்கண் துடிப்பது தீமை நேர்வதற்கு அறிகுறி எனக் கருதப்பட்டது. பெண்கள் தமக்குத் துன்பம் இழைத்தவர்களைத் திட்டினார்கள். குருவின் பெயரைச் சொல்வது பாவம் எனக் கருதப்பட்டது. குருவை மூன்று முறை வலம் வந்து விழுந்து கும்பிடுவது பொதுவழக்கு. மனிதன் நூறு அல்லது நூற்றிருபது ஆண்டு வாழ்வான் என நம்பப்பட்டது. வாயிலிற் கதவிடப்பட்ட சுடலைகள் இருந்தன. பந்து விளையாட்டுச் சிறுவரால் மிகவும் விரும்பப்பட்டது. ஊஞ்சலில் ஆடுவதை அரசரும் விரும்பினார்கள். அரசரும் பெருமக்களும் ஆறுகளிலும் குளங்களிலும் நீந்திக் களித்தனர். விழாக்கள் பறையறைந்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. விழாக் காலங்களில் வறியவர்களும் புது ஆடை உடுத்துப் பூமாலையணிந்து நறுமணம் பூசி மனைவியருடன் மதுவருந்திக் களித்தனர். கார்த்திகைத் திங்களின் மத்தியில் வரும் விழா மிகச் சிறப்புடையது. அன்று அரசன் நகரைச் சுற்றி உலாவருவான். வழக்கமான மதுக்கடைகளைத் தவிர விழாக்காலங்களில் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மகளிர் மைந்தர் சிறுவர் என்போர் திரண்டு நின்று கூத்து, வாத்தியம், பாட்டு, யானைப்போர், ஆட்டுப்போர், மற்போர் முதலியவைகளைப் பார்த்து ஆரவாரஞ் செய்தனர். மரவணக்கம் மக்கள் மரங்களைத் தெய்வமாக வணங்கவில்லை; ஆனால் மரங்களிலுறையும் தெய்வங்களை வணங்கினார்கள். இத் தெய்வங்களுக்குச் சிலவேளை நரபலிகள் கொடுக்கப்பட்டன. மரத்தில் மாலையும் கொம்புகளில் விளக்குகளும் தூக்கப்பட்டன. மரத்தின் அடியில் ஆடு கோழி பன்றி |