பக்கம் எண் :

90தமிழ் இந்தியா

கடவுட்பலியைச் செலுத்துவதற்கும் அழைத்தார்கள். இவ்வகைக் கிரியைகள் புரிவதற்குக் கைம்மாறாக இவர்கள் மிகுந்த பொருளைப் பெற்றனர். பொது மக்கள் இவர்களால் பெரிய நன்மைகளை அடைந்தனர். ஆண்டின் ஆரம்பகாலத்தில் மக்கள் கூட்டங்கூடி இருப்பார்கள். அப்பொழுது இவர்கள் அவ்வாண்டில் நிகழவிருக்கும் பிணி, பஞ்சம், காற்று, மழை ஆகியவற்றை அறிவிப்பார்கள். இவற்றை அறிந்துகொண்ட மக்களும், அரசனும் நிகழவிருக்கும் துன்பங்களுக்கு ஆயத்தமாகவிருந்தனர். தாம் கூறிய வருங்காலப் பலன்களிற் பொய்த்த சத்துவ சாத்திரிகள் தமது ஆயுளின் மீதிக்காலத்தை நிகழ்கால வருங்கால பலன்களைக் கூறாது மௌனமாகக் கழித்தனர்.

  இவர்களுக்கு அடுத்தபடியி லுள்ளோர் உழுதூண் வாழ்க்கையர் . இவர்கள் மற்றவர்களிலும் கூடிய தொகையினர். இவர்கள் போர் முதலிய பொதுக்கருமங்களுக்குரிய காலத்தைத் தவிர மீதி நேரம் முழுவதையும் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடுவதிற் செலவிடுகின்றனர். நாட்டின்மீது படை எடுத்து வருவோர் இவர்களைத் துன்புறுத்துவதில்லை. பொது நன்மைக்குரியோர் என்னும் எண்ணத்தினால் இவர்கள் எல்லா ஆபத்துக்களினின்றும் காக்கப்படுகின்றனர். பகைவரால் அழிக்கப்படாதனவும், மிகுந்த விளைவைக் கொடுப்பனவுமாகிய நிலங்களின் பயன் நாட்டு மக்களின் உணவுக்குப் போதுமானதாயிருந்தது. இவர்கள் குடும்பங்களோடு நாட்டை உறைவிடமாகக் கொண்டனர். நகர வாழ்க்கையை இவர்கள் விரும்பினார்களல்லர். இந்தியநாடு முழுமையிலுமுள்ள நாடு அரசனுக்குச் சொந்தமானது. எவரேனும் சொந்தமான நிலம் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நிலவரியைத் தவிர விளைவில் நாலில் ஒன்றும் அரசனுக்கு உரியதாயிருந்தது.