மூன்றாவது படியிலுள்ளோர் இடையர். இவர்கள் பெரும்பாலும் ஆடுமாடுகளை மேய்ப்பர். இவர்கள் நாட்டிலாவது நகரங்களிலாவது நிலையாக வாழாது கூடாரங்களின் கீழ்த் தங்கினர்; வேட்டையாடியும் பொறி வைத்தும் துட்ட விலங்குகளைப் பிடித்தனர். நான்காவது படியிலுள்ளோர் சிற்பிகள். இவர்களிற் சிலர் ஆயுதங்களைச் செய்தனர். சிலர் பயிரிடுவோருக்கும் பிறருக்கும் வேண்டிய கருவிகளைச் செய்துகொடுத்து அவர்களுக்குத் துணை புரிந்தனர். ஐந்தாவது படியிலுள்ளோர் படையாச்சிகள். இவர்கள் போர்செய்யும் முறையிற் பயின்றிருந்தனர். தொகையளவில் இவர்கள் இரண்டாவதாக விருப்பர். போர் இல்லாத காலங்களில் இவர்கள் பொழுதுபோக்குகளிலும் சோம்புத் தனத்திலும் காலத்தைப் போக்கினர். ஆறாவது படியிலுள்ளோர் கண்காணிமார். நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து சொல்வது இவர்களுக்கு வேலையாயிருந்தது; அரசன் இல்லாத விடங்களில் அவர்கள் தாம் அறிந்தவற்றை நியாயம் வழங்கும் அதிகாரிகளிடம் கூறினர். ஏழாவது படியிலுள்ளோர் பொதுக் கருமங்களில் ஆலோசனை கூறும் கூட்டத்தினர். மற்றவர்கள் எல்லோரையும்விட இவர்கள் சிறு கூட்டத்தினர். உயர்ந்த ஒழுக்கத்துக்கும் அறிவுக்குமாக இவர்கள் மதிக்கப்படுகிறார்கள். அரசனது கருவூலகத்துக்கும், அரசனுக்கு ஆலோசனை கூறுதற்கும். இக்கூட்டத்தினின்று தான் சிலர் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். படைத்தலைவனும் தலைமை நீதிபதியும் இவ்வகுப்பைச் சேர்ந்தவர்களே. |