பக்கம் எண் :

     100
 
புதல்வனான மதுராந்தக உத்தமசோழன் பூசலிட்டதால், அவனை அரசனாக ஏற்று,
இராசராசன் இளவரசுப் பட்டம் ஏற்றான்.
 
     பராந்தகன் பின்வந்த இவ்வரசர்கள் சரிந்த பேரரசின் இழந்த பகுதிகளை மீட்க
அரும்பாடுபட்டனர். இளமையில் மாண்ட சுந்தர சோழனின் மூத்த புதல்வன் ஆதித்தன்,
சேவூர் என்ற இடத்தில் வீரபாண்டியன் மீது வெற்றி கண்டு, 'பாண்டியன் தலைகொண்ட
சோழன்,' என்ற புகழ்ப்பெயர் கொண்டான். ஆயினும் பாண்டியநாடு முற்றிலும்
கீழடக்கப்படாமலே இருந்தது. வடக்கில் சுந்தரசோழன் ஆட்சியிலும் உத்தம சோழன்
ஆட்சியிலும் தொண்டை மண்டலம் முழுவதும் மீட்டும் சோழப் பேரரசுடன்
சேர்க்கப்பட்டது. முன் இராஷ்டிரகூடருடன் சேர்ந்த சிற்றரசரும் இப்போது சோழர்
மேலாட்சியை ஏற்பவராகி விட்டனர்.
 
முதலாம் இராசராசன்
 
     தஞ்சைப் பெருஞ்சோழன் என்னும் புகழ்பெற்ற முதலாம் ராசராசன் (985-1015)
சுந்தர சோழனின் இரண்டாம் புதல்வன். சோழப் பேரரசுக்கு இருநூறு ஆண்டு தளரா
உறுதியுடைய அடிப் படைகோலிய பெரும் பேரரசன் இவனே. போரில் அவன்
வெந்நிடா வெற்றி வீரன். ஆட்சித் திறத்திலும், செயல் திறத்திலும் அவன்
ஒப்புயர்வற்றவன். உறையூரிலிருந்து தஞ்சைக்கு அவன்தன் தலைநகரை
மாற்றிக்கொண்டான். தஞ்சையில் அவன் கட்டிய பெருவுடையார் அல்லது பிருகதீசுவரர்
கோயிலும் கோபுரமும் அதன் முன்னுள்ள பெரிய நந்தியும் தென்னாட்டுப் பண்டைச்
சிற்பக் கலையின் உச்ச நிலையைக் குறிப்பன. தஞ்சைக் கோயிலைப் போலவே, அவன்
அமைத்த ஆட்சி முறையும் அழியாதது. சோழர் ஆட்சிமுறைக்கு மட்டுமன்றி, இன்றைய
தென்னாட்டு ஆட்சிமுறைக்குமே அது, மாறா நிலைவரமான அடிப்படை ஆகும்.