கல்வெட்டுக்களில் ஆட்சி வரலாற்றைக் குறிக்கும் நன் மரபைத் தமிழகத்தில் முதல் முதல் கையாண்ட மன்னன் இவனே. |
இராசராசன் ஆட்சித் தொடக்கத்திலேயே சோழப் பேரரசு வடக்கே பராந்தகன் காலத்து ஆட்சி எல்லையை எட்டியிருந்தது. ஆனால் தெற்கே பாண்டியநாடு இன்னும் முற்றிலும் கீழடக்கப்படவில்லை. இராசராசன் பாண்டியன் அமரபுஜங்கனை முறியடித்துச் சிறைப்படுத்தினான். பாண்டியனுக்கு உதவி செய்த சேரன் பாஸ்கர இரவிவர்மன் மீது படையெடுத்துச் சென்றான். காந்தளூர்ச்சாலை, விழிஞம் ஆகிய இடங்களில் சேரனைவென்று அந்நாட்டைக் கைக்கொண்டான். சேர அரசன் கடற்படையை அழித்தான். ஆட்சியிறுதியில் அவன் கடற்படை பழந்தீவு பன்னீராயிரம் என்று அந்நாள் அழைக்கப்பட்ட மாலத் தீவுகளையும் பிடித்தடக்கி இருந்தது. |
கொங்கு நாட்டின் எல்லையிலிருந்த உதகைக் கோட்டையை இராசராசன் கைப்பற்றிய செய்தி கலிங்கத்துப் பரணியில் குறிக்கப்படுகிறது. இதனையடுத்து இராசராசனின் வீரப் புதல்வனான இராசேந்திரன் வடமலையாளம், கொண்காணம், குடகு ஆகிய பகுதிகளை வென்றான். |
பாண்டியனுக்கு உதவி செய்ததற்காக இராசராசன் இலங்கைமீது படையெடுத்துச் சென்று, பழைய தலைநகராகிய அனுராதபுரத்தை அழித்து, பொலன்னருவா என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஜனரா தமங்கலம் என்ற பெயருடன் அதில் தன் ஆட்சியை நிறுவினான். இந்நகரிலும் மாந்தோட்டம் முதலிய நகர்களிலும் இராசராசனும் அவன் ஆட்சித் தலைவர்களும் கட்டிய கோயில்கள் செதுக்கிய கல்வெட்டுக்கள் முதலியன பல இன்றும் காணப் பெறுகின்றன. |
கொங்கு வெற்றியை அடுத்து மைசூரிலுள்ள கங்கவாடி, நூளம்பவாடி, தடிகைவாடி ஆகிய பகுதிகள் வென்று சோழப் பேரரசில் சேர்க்கப்பட்டன. |