பக்கம் எண் :

     99
 
     பராந்தகன் மதுரையில் மற்றுமொரு தடவை பாண்டிய அரசுரிமையுடன்
பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினான். இந்நோக்கத்துடன் அவன் இலங்கை
மீது படையெடுத்தான்.
 
     வெற்றி காணாமலே அவன் இலங்கைப் போரிலிருந்து மீளவேண்டியதாயிற்று.
ஏனெனில் இராஷ்டிரகூடப் பேரரசனான மூன்றாம் கிருஷ்ணன் இதற்குள் வடதிசையில்
படையெடுத்தான். இராஷ்டிரகூட மன்னன் உறவினனான கங்க அரசனும், சோழனால்
துரத்தப்பட்ட பாண, வைடும்ப அரசரும் அவன் பக்கம் சேர்ந்தனர். ஏறக்குறைய 949ல்
நடைபெற்ற தக்கோலப் போரில் சோழன் தோல்வியுற்றான். அவன் மூத்த புதல்வன்
இராசாதித்தியன் போரில் இறந்தான். மிக விரைந்து வளர்ந்த சோழப் பேரரசில்
குழப்பம் ஏற்பட்டு, தொண்டைநாடு மெள்ள இராஷ்டிரகூடப் பேரரசன் வசமாயிற்று.
 
     கன்னியாகுமரி முதல் நெல்லூர் வரை விரைந்து வளர்ந்த சோழப் பேரரசில்
தொண்டைநாடும் மைசூரும் மீண்டும் விலகின. பாண்டியரும் சோழர் மேலாண்மையை
உதறித் தள்ளித் தன்னாட்சி கண்டனர்.
 
     போர் வீரனாக நாட்கழித்த பராந்தகன் சிவபிரானிடம் பற்றுடையவனாயிருந்தான்.
தன் வெற்றிகளினிடையே பிராமணர்களுக்குப் பல பிரமதேயங்களை வழங்கினான்.
இரணிய கருப்பவிழா, துலாபார விழாக்களால் அவன் தன்னைப் பெருமைப்படுத்திக்
கொள்ளத் தவறவில்லை. அவன் கட்டிய கோயில்களும் மிகப்பல. சிதம்பரம் கோயிலை
அவன் பொன்னால் வேய்ந்தான் என்று லெய்டன் பட்டயம் குறிக்கிறது.
 
     பராந்தகனுக்குப் பின் அவன் இரண்டாம் புதல்வன் கண்டராதித்தனும், மூன்றாம்
புதல்வன் அரிஞ்சயனும் அவன் புதல்வன் சுந்தரசோழனும் ஆண்டனர். சுந்தரசோழன்
மகனான, முதலாம் இராசராசன் பட்டத்துக்கு வருமுன், கண்டராதித்தனின்