பக்கம் எண் :

     103
 
பகுதியையும் உட்கொண்டதாயிருந்தது. இராசேந்திரன் ஆட்சியில் இவ்வெல்லை இன்னும்
விரிவுபட்டதானாலும், அதற்கு அடிகோலியவன் இராசராசனே, தென்னாட்டுப்
பேரரசருள் தலைசிறந்தவன் இராசராசனே என்னலாம்.
 
     தென்னாட்டில் அவன் ஆட்சி பரவாத இடம் வடமேற்குக் கோடியே. இங்கே
ஆண்ட இராஷ்டிரகூடரை அவர்களுக்குமுன் ஆண்ட மேலைச்சாளுக்கிய மரபினரே
வென்று, தம் மரபைப் புதுப்பித்திருந்தனர். இராசராசன் விரைந்த வெற்றிகள்
துங்கபத்திரையைக் கடக்கவில்லை. அதே சமயம் மேலைச்சாளுக்கியரும் தம் நாட்டின்
வடதிசையில் ஆண்ட பாரமாரருடன் கடும்போர் செய்வதில் ஈடுபட்டிருந்ததால், தெற்கே
நாட்டம் செலுத்த முடியவில்லை.
 
முதலாம் இராசேந்திரன்
 
     முதலாம் இராசேந்திரன் (1012-1044) ஆட்சியில் சோழப் பேரரசு தென்னாடு
கடந்து நிலத்திலும் கடலிலும் கீழ்நாடுகளிலும் வேறெந்தப் பேரரசும் அடையாத
பேரெல்லையும் பெருவாழ்வும் அடைந்தது. திருவாலங்காட்டுப் பட்டயங்கள் அவன் நில
வெற்றிகளையும் கடல் வெற்றிகளையும் விவரமாகக் குறிக்கின்றன.
 
     தென்னாட்டில் இராசராசனால் வென்று கைக்கொள்ளப் படாதிருந்த ஒரே பகுதி
மேற்குச் சாளுக்கியர் ஆண்ட வடமேற்குப் பகுதியே. இராசேந்திரன் முதன்முதலாக
மேற்குச்சாளுக்கிய அரசன் சத்தியாசிரயன்மீது தாக்குதல் நடத்தினான். இடிதுறைநாடு
அல்லது வனவாசிப் பகுதியைக் கைப்பற்றிய பின் அவன் கொள்ளிப்பதாகைக்
கோட்டையை முற்றுகையிட்டழித்தான். மண்ணைக் கடகம் அல்லது மான்யகேதம் என்ற
தலைநகரம் மீண்டும் என்றும் தலைதூக்காவண்ணம் அழிக்கப்பட்டது. மேலைச்
சாளுக்கியர் இதன்பின் கலியாணியைப் புதுத் தலை நகராக்கி ஆண்டனர்.