வீரராசேந்திரனுக்குப்பின் அவன் பிள்ளைகளுள் ஒருவனே அரசுரிமைக்கு வந்ததாக அறிகிறோம். ஆனால் அவன் மைத்துனனான மேலைச்சாளுக்கிய விக்கிரமாதித்தியன் அவனுக்கு உதவி செய்தும்கூட, அவனுக்கெதிராக நாடெங்கும் கிளர்ச்சியும் குழப்பமும் மிகுந்தன. அவன் ஓரிரு வாரங்களே ஆட்சி செய்து மாண்டான். |
சக்கரக் கோட்டத்திலிருந்து கொண்டே ஒரிசாப் பகுதியிலும் கடல்கடந்த நாடுகளிலும் தன் வெற்றிப்புகழ் நாட்டி வந்த கீழைச்சாளுக்கிய இராசேந்திரன் இப்போது சோழ நாடு வந்து முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழப் பேரரசைக் கைக்கொண்டான். |
முதலாம் குலோத்துங்கன் |
முதலாம் குலோத்துங்கன் (1070-1120) சாளுக்கியர் குடிக்கும் சோழர் குடிக்கும் ஒருங்கே உரியவனாதலால் உபய குலோத்துங்கன் (இரு குலப் புகழ்கொண்டவன்) என்றும், சாளுக்கிய சோழன் என்றும் அழைக்கப்படுகின்றான். இராசராசன் காலத்தில் உறுதியான அடிப்படையுடன் அமைந்த சோழப் பேரரசு 1070-க்குள் தளர்வுறத் தொடங்கியிருந்தது. முதலாம் குலோத்துங்கன் நீண்டஆட்சி அதற்கு மீண்டும் வலுத்தந்து, அதை இன்னும் நூறாண்டு வாழவைத்தது. குலோத்துங்கன் வீரனும் நல்லாட்சியாளனும் மட்டுமல்ல, காலமறிந்து விட்டுக் கொடுத்து வெல்லும் பண்பும் உடையவன். எல்லை கடந்து பேரரசைப் பெருக்கி, அதன் வலுவைக் குறைக்காமல், தேவைப்பட்ட இடங்களில் குறுக்கி உறுதிப்படுத்தவும் அவன் தயங்கவில்லை. |
மேலைச்சாளுக்கிய அரசின் ஒருபகுதி இப்போது முந்திய சோழன் வீரராசேந்திரன் மருமகனான ஆறாம் விக்கிரமாதித்தனிடம் இருந்தது. அவன் குலோத்துங்கனின் மாறாப் பகைவனாகி அவன்மீது படையெடுத்தான். ஆனால் மேலைச் சாளுக்கிய அரசின் வடபாதி அரசனான இரண்டாம் சோமேசுவரனும், |