பக்கம் எண் :

118
 
பெருஞ் சிறப்புகள் செய்தான். சீரங்கக் கோவிலை அவன் பொன்னால் வேய்ந்ததனால்
ஹேமச்சாதன ராஜா என்று தன்னைக் குறித்துக் கொண்டான்.
 
பிற்காலப் பாண்டியன்
 
     சடையவர்மன் குலசேகரன் (1252-1275) சுந்தர பாண்டியன் காலத்திலேயே அவன்
இளவலாயிருந்து ஆண்டான் என்று கூறலாம். ஏனெனில் அவன் காலத்திலேயே
பாண்டிய மண்டலத்துக்குட்பட்டு இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. காரிக்களம்
என்ற இடத்துப் போரில் அவன் இலங்கையில் இரண்டு அரசரை வென்று, கோணம்பி,
திரிகூடமலை ஆகிய இடங்களில் பாண்டியரின் இணை கயல் கொடியை நாட்டினான்.
 
     மாறவர்மன் குலசேகரன் (1268-1312) சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1276-1292)
ஆகிய இருவரும் ஒரே காலத்தில் ஆண்ட பேரரசர்கள்.
 
     சேரன், சோழன், ஹோய்சளர் ஆகியவர்களைவென்று திறைகொண்டு அவற்றால்
குலசேகரன் திருநெல்வேலி மதிற் சுவர்களைச் செப்பம் செய்து உயர்த்தினான்.
கண்ணனூரில் அவன் வென்று போரிட்டு அப்பகுதியை வென்றான். இப்போரில்
பாண்டியன் படைத்தலைவனாக இருந்து வெற்றிப் புகழ் பெற்றவன் ஆரிய சக்கரவர்த்தி
என்ற பெயர் உடையவன். அவன் மன்னருடனொத்த புகழுடன் விளங்கினான்.
மன்னருக் கொப்பாகத் தமிழ்ப் புலவர்களையும் ஆதரித்தான். இலங்கை அரசன் அவன்
காலடியில் பணிந்து புத்தர் 'பல்' பேழையையும், செல்வங்களையும் அவனிடம்
காணிக்கையாக ஒப்படைத்துப் பரிசாக மீட்டும் பெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. 1302-ல்
இலங்கை அரசன் வேண்டுகோள் மீது பாண்டியன் 'பல்' பேழையைப்
பெருந்தன்மையுடன் திருப்பிக் கொடுத்தான்.