திருப்பதிகங்களும் பிறவும் இப்போது தலபுராணங்களுக்கு உரியவை ஆயின. இலக்கியத்தின் இன்னொரு துறையாகப் பழைய இலக்கியங்களுக்கு உரை நடையில் விளக்கங்கள் எழுதப்பட்டன. சில உரைகள் பல்லவ பாண்டியர் காலத்தில் சோழ பாண்டியர் காலத்தில் எழுந்தனவாயினும், பெரும்பாலான உரையாசிரியர்களின் காலம் 12-முதல் 14-ம் நூற்றாண்டு வரையிலுமேயாகும். இவை தற்கால உரைநடை இலக்கியத்துக்கு முன்னோடிகளாயின. மூன்றாம் இலக்கியத்துறை, மக்கள் இலக்கியமாகும். அறிவுத் துறையில் இவை சித்தர்களின் ஞானப் பாடலாகவும், மருத்துவம் முதலிய நூல் துறைகளாகவும், கலைத்துறையில் பண்டைக்காலப் பாணரின் புதிய பதிப்பான கவிராயர் பாடல்களாகவும் வளர்ச்சியுற்றன. | தெலுங்கு இலக்கியத்தின் மிகப்பெரும் பகுதியும் மலையாள இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதியும் இக்காலத்தனவே. விசய நகர ஆட்சிக்குப் பின் தெலுங்கு நாட்டுக்கு வெளியிலேயே தெலுங்கு நாடக இலக்கியமும் உரைநடை இலக்கியமும் பேரளவில் வளர்ச்சியடைந்தன. மலையாளத்தில் 16-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியம் திருவாங்கூரில் தமிழ்க் காவியங்களைப் பின்பற்றிய இலக்கியமாகவும், வட மலையாளத்தில் (மலபாரில்) மக்கள் நாடோடிப் பாடல்களாகவும் நிலவின. 16-ம் நூற்றாண்டில் அரசியல் குழப்ப நிலைகளுக்கிடையே சமய, கலை, இலக்கிய இயக்கம் உண்டுபண்ணிய மக்கட் கவிஞனான எழுத்தச்சனால் மலையாள இலக்கியம் புதியதொரு கிளர்ச்சி பெற்றது. குஞ்சன் நம்பியார் அவரை அடுத்து இலக்கியத்தை இன்னும் பொதுமக்கள் உடைமை ஆக்கினார். கன்னட இலக்கியம் இக்காலத்தில் பக்தி இயக்கச் சார்பாகத் திரிந்து மலையாள இலக்கியத்துடன் ஒன்றுபட்டது. | | |
|
|