தலைதூக்கி நின்ற சோழ மரபினர்; செந்தமிழ்ப் புலவோருக்குப் பரிசில் தருவதில் முந்துற்று நின்ற சேர மறவர்; தமிழகம் தளர்ந்த போதும் தளராது நின்ற கருநாடகப் பெருமக்கள்; இரட்டைப் பாய்மரக் கப்பலோட்டி அதையே தம் நாணயங்களில் சின்னமாகப் பொறித்த ஆந்திரப் பேரரசின் வழிவந்த கடலோடித் தெலுங்கர் ஆகிய அத்தனைபேரும், நுகத்தடியில் பூட்டப் பெற்ற சிங்கம் புலி கரடிகள் போல நூறாண்டுகள் அடங்கிக் கிடந்தனர். ஆனால் இவ்வடக்கம் முற்றிலும் வீண்போகவில்லை. தன்னாண்மை, விடுதலை ஆகியவை வீரத்தின் சின்னங்கள் மட்டுமல்ல, ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைத் தென்னாட்டு மக்கள் அறிய இவ்வடக்கம் பெரிதளவு உதவியுள்ளது. | தென்னாட்டவர் வீரமும், பொருளும், அறிவும் பிரிட்டிஷ் ஆட்சியினருக்குச் சிந்து கங்கை வெளியையும் அது கடந்து பிறகு கீழுலகப் பகுதிகளையும் தம் ஆட்சிக்குட்படுத்தப் பேருதவியாயிருந்தன. அத்துடன், இதுவரை கடல் கடந்த வாணிகத்தாலும், ஆட்சியாலும், தொழில்வளத்தாலும் தென்னாட்டில் உலகின் பெரும்பகுதி தங்கம் வந்து குவிந்துகிடந்தது. தென்னாட்டைச் சூழ்ந்துள்ள நாடுகளில் தென்னாடு உலகின் தலை சிறந்த வாணிகக் களத்தையும் தோற்றுவித்திருந்தது. இவ்விரண்டின் உதவியால் உலகின் ஒரு மூலையிலிருந்த பிரிட்டன் உலகின் தொழில் களமாய், வாணிக மூலதனமாய், செல்வச் செருக்குமிக்க கடற்பேரரசாக வளர முடிந்தது. தென்னாட்டின் தலைசிறந்த வாழ்வு முன்பு கீழை உலகத்தை வளர்த்தது போல, பிரிட்டனின் தலைசிறந்த வாழ்வு மேலை உலகத்தை வளர்த்தது. | ஆயினும் பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்பட்ட தீங்குகள் தற்காலிகமானவை மட்டுமே. அதன் நலன்கள் நிலையானவை. வலிமை மிக்க பேரரசுகளை எதிர்த்து வெற்றி கண்ட வீரன் சிவாஜி, அவ்வெற்றியின் முடிவில் அறிந்த பெரும் படிப்பினையைத் தென்னாடு பிரிட்டிஷ் ஆட்சியிலேயே முதல் தடவையாகக் கண்டுணர்ந்தது. புறப்பகையை வெல்லப் பயன்படும் வீரம் | | |
|
|