பக்கம் எண் :

143
 
சீர்த்திருத்த அறிவையும் பகுத்தறிவையும் புகட்ட அரும்பாடு பட்டனர். மலையாள
நாட்டில் குஞ்சன் நம்பியாரும், கன்னட நாட்டில், சர்வஞ்ஞரும், தெலுங்கு நாட்டில்
வேமண்ணாரும் இதே அரும்பணியைச் செய்தனர். மராட்டிய நாட்டில் வைணவ
இயக்கத்தைப் பரப்பிய ஞானேசுவரர் முதலிய பக்தர்களும் உயர் குடியினரின்
பேரெதிர்ப்பையும் பொருட்படுத்தாது இதே பணியை ஆற்றினர். தமிழகத்தில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை பக்தி இயக்கமும் சமூகச் சீர்திருத்த
இயக்கமும் ஒன்றுபட்டு நிலவின என்பதை இராமலிங்க வள்ளலாரின் வரலாறும்
பாடல்களும் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. வங்க நாட்டில் இதே ஒளி இராஜாராம்
மோகன்ராயரின் பிரம சமாஜ இயக்கமாகத் தளிர்த்தது. இன்னும் தொலைவில் வட
மேற்கில் பாஞ்சாலத்தில் இது தயானந்த சரசுவதியின் ஆரிய சமாஜத்தின் உள்ளார்ந்த
கருத்துக்களாக உலவின.
 
பிரிட்டிஷ் ஆட்சித் தொடக்கத்திற்குள் தென்னாட்டின் பண்காலக் கல்வி
முறைகள் பெரிதும் வீழ்ச்சியடைந்திருந்தன. காஞ்சியிலும் பண்டை வங்கத்திலும்
நடைபெற்ற புத்தகாலப் பல்கலைக் கழகங்கள் வரலாற்று ஆராய்ச்சிக்குரியவையாக ஆகி
விட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே நடைபெற்றன. அவற்றுள்ளும் பல
வகுப்பினர் நுழையவிடப்படாமல் தென்னாட்டின் மீது பரவிய இடைக்கால அடிமை
நாகரிகம் தடுத்தது. இந் நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி பரப்பும்
வேலையில் மேனாட்டுக் கிறித்தவ சமயப் பெரியார் முனைந்தனர். அவர்கள் முயற்சி
போதிய வெற்றியும் கண்டது. பிரிட்டிஷ் அரசியலார் 1858-ன் பின் இதைப் பரப்ப முன்
வந்தனர்.
 
கல்வி முறை
 
     தொடக்கத்தில் கல்வியை எந்த மொழியில் நடத்துவது என்பது பற்றிய வினா
எழுந்தது. இந்தியப் பேரரசில் ஆட்சிகள் பல, மொழிகள் பல. மக்கட் பண்பாடுகளும்
வகுப்புகளும் பல