பக்கம் எண் :

144
 
தரப்பட்ட உயர்வு தாழ்வுடன் உடையன. இந்நிலையில் ஆங்கில மொழியே ஒரே
நிலைக் கல்வியைத் தரும் என்று மேனாட்டு அறிஞர்கள் பலர் எண்ணினர். சமயப்
பணியாளர்களும் இயல்பாக அம்மொழியையே பரப்பியிருந்தனர். ஆனால்
மேனாட்டாட்சியாளர்கள் தம்மொழியை மக்கள்மீது சுமத்தலாகாது என்றுஒரு சில
மேனாட்டு அறிஞர்கள் கருதினார்கள். அறிஞர் இராஜாராம்மோகன்ராயர்
பெருந்தன்மைமிக்க இவ்ஆங்கில அறிஞர்களின் கருத்துத்துகள் தவறானது என்று
வாதாடி, ஆங்கிலத்துக்கே ஆதரவு தேடியிருந்தார். அதன் பயனாக ஆங்கிலமொழிக்
கல்வியே மாநிலமெங்கும் பரந்தது.
 
     இராஜாராம் மோகன் ராயர் கருத்து மேலடியாய்ப் பார்த்தால் தேசிய நோக்குக்கு
மாறானதென்று தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் கீழ்நாட்டின் மறுமலர்ச்சி அவர்
கருத்தின் பயனாகவே ஏற்பட்டுள்ளது என்பதை நாம் இன்றும் காணலாம். தென்னாட்டு
மொழிகளைப்போலப் பண்டை இலக்கிய வளம் பேரரசின் பிற்பகுதிகளில் அன்று
இல்லை. பொதுமக்கள் வாழ்வுடன் தொடர்பற்ற சமஸ்கிருத மொழி ஒன்றே சிந்து,
கங்கை சமவெளியின் இலக்கிய மொழியாக இருந்தது. எனவே கீழ் நாட்டைத் தாண்டி
வேகமாக வளர்ந்துவரும் உலக நாகரிகத்தை ஒரு சிறிதாவது எட்டிப் பிடிக்க வடநாட்டுத்
தாய்மொழிகளோ சமஸ்கிருதமோ அன்று உதவியிருக்க முடியாது. தென்னாட்டில் கூடத்
தமிழ் நீங்கலான மற்றத் தாய்மொழிகளில் பண்டைப் பேரிலக்கியங்கள் பெரிதும்
அழிந்துவிட்டன. இந்நிலையில் ஆங்கிலமொழிக் கல்வி மக்களுக்குத் தற்கால உலக
நாகரிக ஒளியையும், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்தரம் ஆகிய உயர்த்
தத்துவங்களையும் பரப்பி அறிவுக் கண்ணைத் திறக்கப் பெரிதும் உதவியுள்ளது.
 
புதையுண்ட பழம் பேரிலக்கியங்கள்
 
     பண்டைப் புத்த சமண மக்களால் பாதுகாக்கப்பட்டுச் சைவ