சமயம் கடல் கடந்த தமிழகத்தில் நின்று தலைவர் பெருந்தகை போஸ் நிகழ்த்திய விடுதலைப்போர்ப்புயல் ஆகிய இத்தனையும் உலகமக்கள் உள்ளத்திலும் உலக அரசியலின் போக்கிலும் பெருத்த மாற்றம் உண்டு பண்ணின. 1947 உலகம் அதற்களித்த மறுமொழி, பிரிட்டிஷ் ஆட்சி விலகிவிட்டது. கீழை உலகின் விடுதலை விளக்குப் பொன்னொளி வீசத் தொடங்கியுள்ளது. |
தென்னாட்டின் தேசீய விடுதலைக் குரலுக்கு இரண்டு ஓசைகள் உண்டு. ஒன்று புற ஓசை. மற்றொன்று அகஓசை, புற ஓசை வெளியாட்சி ஏகவேண்டுமென்பது. அக ஓசை தன்னாட்சி ஏற்பட வேண்டுமென்பது. இவற்றுள் ஒன்று நிறைவெய்தியுள்ளது. மற்றது இன்னு மெய்யான வடிவில் ஏற்படவில்லை. |
இந்திய மாநில இயக்கம் தோன்றுமுன் இருந்ததைவிட மாநில இயக்கத்தின் பின் மாநிலத்தின் தொழில் நிலை உயர்ந்துள்ளது. அது பிரிட்டனுடன் சிறிது தொலைவில் நின்றாவது போட்டியிடவல்ல தொழிலரசாகவும் வல்லரசாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் மாநிலத்தின் இந்த முன்னேற்றத்தில், அயலார் படையெடுப்புகளுக்கு வாயிலாயிருந்த சிந்து கங்கைப்பரப்பே பங்கு கொண்டுள்ளது. கீழ்த்திசை நாகரிகத்தின் தூய தாயகமான தென்னாடு அதனின்றும் ஒதுங்கி அதன் நிழலாக, அதன் வளர்ச்சிக்கு இடம் தரும் வாணிகக் களமாக மட்டுமே நிலவுகின்றது. |
மாநிலத் தேசீயக் குரலை எழுப்பியவர்கள் மாநிலமெங்கும் அதை ஆங்கில மொழியிலேயே எழுப்பினர். தாய் மொழிக்குரலை முதல் முதல் எழுப்பியது தென்னாடே. அது மட்டுமன்று, விடுதலை முழக்கத்தையே இலக்கியக் குரலாக, பாரதி, பாரதிதாசன் ஆகிய கவிஞர்களின் கவிதைக்குரலாக எழுப்பியது தமிழகமே. ஆனால் விடுதலைக் குரலை முதலில் எழுப்பிய ஆங்கில மொழியின் இடத்தில் தென்னாட்டு மொழிகளுள் ஒன்றோ, பாரதியாரின் திருமொழியோ இடம் பெறவில்லை; தென்னாட்டுக்கப்பாலுள்ள பரந்துபட்ட ஒரு பண்பிலாமொழியே இடம் பெற்று வருகின்றது. |