சமஸ்கிருத இலக்கியத்துக்கு முன்பே தமிழகத்தில் முத்தமிழ் இலக்கண இலக்கியமும் முத்தமிழ் கலையும் உண்டு. ஆனால் சமஸ்கிருதத்துக்கே வழிகாட்டிய தமிழ் இலக்கியத்துக்கு மாநிலப் பல்கலைக் கழகங்களில் இடம் இல்லை; அதன் நிழலாக நிலவிய சமஸ்கிருத இலக்கியத்துக்கே இடம் தரப்பட்டுள்ளது. |
தென்னாடு எழுப்பிய விடுதலை முழக்கத்தின் புறஓசையுடன் மாநிலம் நிறைவடைகின்றது. ஆனால் அகஓசையைத் தென்னாடு எழுப்பியுள்ளது, எழுப்புகிறது. |
தென்னாட்டு அகவிடுதலை வரலாறு |
வ.உ.சிதம்பரனார் புற விடுதலையைக் கனவு கண்ட அதே நாளிலேயே, அகவிடுதலையைக் கனவு கண்டார். மற்றொரு தமிழகப் பெரியார் டாக்டர் சி.நடேசனார், தென்னாட்டின் தூய பழம்பெரும் நாகரிகத்தை வளர்க்க அவர் 1912-ல் திராவிட சங்கம் அமைத்தார். புற விடுதலையை மட்டுமன்றி அக விடுதலையை - ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளை உடைய தென்னாட்டுத் தேசீய விடுதலையை எழுப்ப அவர் முனைந்தார். 1916-ல் அது நேர்மைக் கட்சியாகவும், பெரியார் ஈ.வெ.ராவின் தலைமையில் 1924-ல் தன்மான இயக்கமாகவும், 1944-ல் திராவிட கழகமாகவும், 1948-ல் கலையறிஞர் சி.என்.அண்ணாத்துரையின் தலைமையில் திராவிடமுன்னேற்றக் கழகமாகவும் மலர்ச்சியுற்று வந்துள்ளது. புறவிடுதலைக் கனவு கண்டு அதனுள் அகவிடுதலையைக் குழைத்த பாரதியாரைப் போல, அகவிடுதலைக் கனவு கண்டு அதில் புதிய நாட்டு விடுதலையாகிய புற விடுதலையைக் குழைத்துத் தந்துள்ளார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். |
நாடு என்ற சொல் பண்டு மிக்க குறுகிய ஒரு சிறிய எல்லையையே குறித்தது. நாடு கடந்து பண்பாடு மட்டுமே வளர்ந்தது. ஆனால் அரசியல் எல்லை பண்பாட்டெல்லையை எட்டிப் பிடிக்குந்தோறும் நாடு என்ற சொல்லும் விரிந்த எல்லையைக் |