பக்கம் எண் :

149
 
குறித்தது. பறம்புநாடு, எய்மாநாடு என்பவை பாரி முதலிய வேளிர் ஆண்ட
எல்லையைக் குறித்தன. சேரநாடு, சோழ நாடு, பாண்டியநாடு என்பன அரசர் நீடித்து
ஆண்ட எல்லையாயின. இந்த எல்லைகளும் வரவர விரிவுற்றன. ஆனால் மொழி
எல்லையில் வந்தபின் நாட்டெல்லையின் வளர்ச்சியில் ஒரு புது மாறுதல் ஏற்பட்டது. புற
எல்லை விரிவைவிட அக எல்லையின் ஆழம் மிகுதி ஆற்றல் தரும் என்ற உண்மை
உணரப்பட்டது. ஆகவே மொழி எல்லையில் நின்று நாடுகள் தம் எல்லையுட்பட்ட
மக்கள் வாழ்வின் உயர்வு தாழ்வுகளை வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபட்ட வலு
நாடிற்று. ஒவ்வொரு நாடும் அகலுலக ஒற்றுமைக்கு அடிப்படையான உறுதியான ஒரு
தளமாக வளர்ந்தது.
 
     மொழி கடந்த ஒற்றுமை அருமையானது; ஆனால் அது முடியாத ஒன்றல்ல. அது
மொழியின் தன்னாட்சி அடிப்படையான கூட்டுறவாட்சியாய் இருக்கவேண்டும். அத்துடன்
சரிசமத்துவமும் நேசமும் உடையதாய் உறுப்பினரின் மனமார்ந்த தங்குதடையற்ற
விருப்பத்தின் மீதமைந்ததாய் இருக்கவேண்டும். இத்தகைய மொழி கடந்த கூட்டரசின்
ஒற்றுமை, உலக ஒற்றுமைக்கு அடி கோலுவதாய் அமையும்.
 
     இன்றைய உலகம் மொழி கடந்து, இனம் கடந்து, எல்லைக் கோடுகள் கடந்து
பண்பாட்டில் வேகமாக முன்னேறி வருகிறது. ஆயினும் மொழிமீது மொழி ஆட்சி
செய்கிறது. மொழிக்கு மொழி உயர்வு தாழ்வு இருக்கின்றது. இதேநிலை
இனங்களுக்கிடையிலும் எல்லைக் கோடுகளுக்கிடையிலும் இருக்கிறது. செல்வ உயர்வு
தாழ்வுகள் நாகரிகங்குன்றிய பண்டை நாட்களை விட இன்று மிகுதி. அத்துடன்
நாகரிகங்குன்றிய நாடுகளை விட நாகரிகமிக்க நாடுகள் என்று கூறப்படுவனவற்றில் தான்
இது மிகுதி. இந்த நிலைகளை மாற்றினாலன்றி, மாற்ற வழிகாட்டும் ஒரு புதிய நாகரிகம்
தோற்றினாலன்றி, ஓர் உலகம் என்பது பழைய ஏகாதி பத்தியவாதிகளின்
புதியகுரலாகுமேயன்றி வேறன்று.