வழிகாட்டும் தென்னாட்டு நாகரிகம் | இதற்கு வழிகாட்ட வல்லது தென்னாட்டு நாகரிகம் ஒன்றே - ஆனால் உலகின் எல்லாப் பெரியாரும் இதே வழியைக் காட்டியுள்ளனர். உயர்ந்தவன் உயர்வுக்கு உரைகல், அவன் தன் உயர்வுக்குப் பாடுபடாமல் பிறர் உயர்வுக்கு, தாழ்ந்தவர் உயர்வுக்குப் பாடுபடவேண்டும் - என்பதே. உரிமையில் சமத்துவம் வேண்டும், ஆனால் கடமையில் உயர்ந்தோர் - தாழ்ந்தவர்களுக்குத் தம் உரிமையை விட்டுக்கொடுக்கவேண்டும். இயேசுவும், முகம்மதுவும், புத்தரும், மகாவீரரும், மகாத்மா காந்தியும், டால்ஸ்டாயும், ரோமேன் ரோலந்தும், இராமலிங்க வள்ளலாரும் கண்ட கனவு இது - இதுவே வள்ளுவர் எல்லாருக்கும் முற்படக் கண்ட நனவு. | | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு | தென்னாடு தான் ஒற்றுமை வளர்த்து, சமத்துவ அடிப்படையில், உயர்ந்தவர் தாழ்ந்தவர்க்கு விட்டுக்கொடுத்து உழைக்கும் கட்டுப்பாட்டு அடிப்படையில், சாதி மத இனவேறுபாடும் உயர்வு தாழ்வும் அற்ற பண்பாட்டின் அடிப்படையில் ஒரு புதிய தேசீய இனமாக ஆர்வம் கொண்டுள்ளது. அறிவுடைய உலகம் அதனை ஆதரிப்பது உறுதி. ஏனெனில் அது உலகுக்கு வழிகாட்டியாகும். அதை அடையும் வகையில் உலகின் வேறெந்த இலக்கியத்தையும் விடத் தூய தனித்தமிழ் இலக்கியமாகிய தொல்காப்பியமும் திருக்குறளும் மற்றச் சங்க இலக்கியங்களும் உதவும். மேனாட்டு இலக்கியமும் இதற்கு உறுதுணையாகும். கீழ்நாடுகளின் மற்ற இலக்கியங்கள் - இடைக்காலத் தமிழ் இலக்கியம் உட்பட - இவற்றின் பேருதவியால் புதுப்பிக்கப்படத் தக்கவையேயாகும். | கதிரவன் மேற்கு நோக்கிச் செல்கிறான், சாய்கிறான். அவன் கிழக்கே திரும்பவும் எழுவது திண்ணம். அவன் வடக்குநோக்கிச் சாய்கிறான். அவன் தெற்கு நோக்காதிருக்க முடியாது. ஏனெனில் அதுவே கதிரவனின் சமன் செய்யும் ஏம முறை. தமிழகம் | | |
|
|