பல்வேறு இனத்தார் நாகரிக உலகத்துக்கு இரண்டாயிர ஆண்டு தொல்லை தந்து கொண்டே இருந்தனர். |
இந்து-ஐரோப்பியர்கள் நடு ஆசியப்பகுதியில் உள்ள ஆரிய. நாட்டில் வந்த பின்னரே ஆரியர் என்ற பெயருக்கு உரியவராயினர். ஓரளவு தங்கல், குடியிருப்புக்களும் தற்காலிகப் பயிர்த் தொழிலும் கற்றனர். பழைய நாகரிகங்களின் அழிபாட்டின் மீது, அவற்றின் பண்புகளைத் தம் பண்பாக்கி இவர்கள் புதிய நாகரிகங்கள் அமைத்தனர். ஆரியர் என்ற பெயரை மேற் கொள்ளாமலே தென் ஐரோப்பாவில் இப்புதிய நாகரிகங்கள் கிரேக்க, உரோம நாகரிகங்களாகத் தழைத்தன. ஆசியாவில் பாரசீக நாகரிகமும் வரலாற்றுக் கால சிந்து கங்கைச் சமவெளியின் பிற்கால நாகரிகமும் கீழை இந்து - ஐரோப்பிய அல்லது ஆரிய இனத்தைச் சார்ந்தவை ஆகும். |
இந்தியாவில் ஆரியர் சிந்து ஆற்று வெளியில் ஏறத்தாழ கி.மு.1500 முதலும், கங்கையாற்று வெளியில் கி.மு. 7-ஆம் நூற்றாண்டிலிருந்தும் புதுவாழ்வு அமைத்தனர். நடு ஆசிய ஆரியரைக் காட்டிலும் சிந்துவெளி ஆரியர் நாகரிகத்தில் மேம்பட்டிருந்தனர். சிந்துவெளித் திராவிடரின் தொடர்பே இதற்குக் காரணமாகும். கங்கை வெளியில் வந்தபின் பழங்குடிப் பண்பாட்டுடன், இன்னும் மிகுதியாகக் கலந்து ஆரியர்கள் மேலும் சிறப்புற்றனர். இக்காலப் பண்பின் சுவடு இன்னும் சமஸ்கிருத மொழியில் காணப்படுகிறது. நாட்டுப் பெயர்கள் இன்னும் நாட்டார் பெயராகவே அம்மொழியில் இடம் பெறுவது காணலாம். கி.மு. 7ஆம் நூற்றாண்டில்தான் ஆரியர் நிலையாகக் குடி வாழ்வும் நாடு நகர அமைப்பும் உடையவராயினர். |
தொடக்க காலங்களில் சிந்துவெளி ஆரிய நாகரிகமும், இடைக்காலங்களில் கங்கைவெளி ஆரிய நாகரிகமும் இந்திய ஆரிய நாகரிகங்களாகப் புகழ்பெற்றன. கங்கை வெளியில் புதிதாக ஆக்கப்பட்ட இந்திய ஆரிய இலக்கிய மொழியே சமஸ்கிருதம் அல்லது திருந்திய ஆரியமொழி என்று பெயர் பெற்றது. |