பக்கம் எண் :

18

 
உரமாகவும் பயன்படத்தக்கன. அவற்றை நாம் பேணி வளர்க்கும் கடப்பாடு
உடையவராவோம்.
 
     வருங்கால உலக நாகரித்தின் வளர்ச்சியில் தென்னாட்டுக்கு மற்ற எல்லா
நாடுகளோடொத்த சரிசம உரிமை உண்டு. ஆனால் அதன் கடமையும் பொறுப்பும் மற்ற
எந்த நாடுகளைக் காட்டிலும் மிகப் பெரியன. பதினாயிரக்கணக்கான ஆண்டு நாகரிக
வாழ்வு வாழ்ந்து மனித நாகரிகத்தை வளம்பெறச் செய்து வளர்த்ததனால், அது நீண்டு
அகன்று ஆழ்ந்த அனுபவ அறிவையும், வளர்ச்சிக்கு உயிர்நிலைகளா யுதவவல்ல
நுண்நயப் பண்புகளையும் பெற்றிருக்கின்றது. இந்நாட்டு மக்களின் நாடி நரம்புகளில்
அவர்கள் குருதியணுக்களில் இப்பண்புகள் ஊறித் தோய்ந்து கிடக்கின்றன.
தென்னாட்டின் மொழிகளிலும் கலைகளிலும், பண்பாடுகளிலும் அவை பரந்து ஊடாடி
விரவி நிற்கின்றன. இவற்றின் மூலமாகத் தென்னாடு தன் வருங்கால வாழ்வை
வளப்படுத்த முடியும். மனித இனத்தின் வருங்காலத்தையும் வகுத்து வளமாக வளர்க்க
முடியும். இவற்றைச் செய்வதே தென்னாட்டின் முழுமுதற் கடமை, தென்னாட்டவரின்
தனிப்பெரும் பொறுப்பு.
 
     தென்னாட்டவராகிய நாம் தென்னாட்டின் புகழை வளர்க்கவும், உலக நாகரிகத்தில்
தென்னாட்டுக்குரிய இடத்தை அதற்கு மீட்டும் பெற்றுத்தரவும் பாடுபட வேண்டும். இது
சிறு செயல் அன்று. எளிய செயலும் அன்று. நாட்டு மக்கள் அனைவரும் முழு
ஆர்வத்துடன் ஒன்றுபட்டு ஒத்துழைத்து நிறைவேற்ற வேண்டிய செயல் ஆகும். இதில்
ஈடுபட்டு வெற்றி காண வேண்டுமானால், ஈடுபடுபவரைத் திறம்பட நடத்த
வேண்டுமானால், நாம் தென்னாட்டின் இன்றைய சூழ்நிலைகளைச் சரிவர உணர்ந்து
கொள்ள வேண்டும். நிகழ்காலத்திலேயே, அதன் வருங்கால வளர்ச்சிக்குரிய
நற்பண்புகளையும், அவ்வளர்ச்சியைத் தடுக்கக் கூடிய வளர்ச்சிக் கூறுகளையும்
அவற்றின் பழைமை நோக்கித் துருவிச் சென்று ஆராய்தல் வேண்டும்.