பக்கம் எண் :

21

 
எந்த அளவு கட்டுக்கதை என்பதை நாம் அறிய முடியவில்லை. மொழியாராய்ச்சி, இன
ஆராய்ச்சி, பழம்பொருளாராய்ச்சி ஆகியவையே இவற்றின் மெய்மை பொய்மைகளை
விளக்கவும், அவற்றிடையே வரலாற்று ஒளி காணவும் நமக்குப் பயன்பட்டு வருகின்றன.
 
குகை மனிதர்
 
     உயிரினங்கள் ஓரணு உயிர்முதல் பலபடி உறுப்பமைதி உடைய உயிரினங்கள்
ஊடாக முழுநிறைப் பேருயிரான மனிதன்வரை வளர்ச்சியடைந்தன என்று மண்ணூல்,
உயிர்நூல் ஆகியவற்றால் அறிகிறோம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்ட
தமிழ் நூலாகிய தொல்காப்பியம் இதை இன்னொரு வகையாகக் குறிப்பிடுகிறது.
'ஓரறிவுயிராகிய செடி கொடி இனமுதல் ஆறறிவுயிராகிய மனிதன் வரை இவ்வளர்ச்சி
விரிவுற்றது' என்பது தொல்காப்பியர் கோட்பாடு.
 
     மனிதன் தொடக்கத்தில், நூறாயிரக்கணக்கான ஆண்டு களுக்குமுன்,
விலங்குகளுடன் விலங்காய் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நாடு, நகர், வீடு கிடையாது.
அவன் குகைகளிலும் மரப் பொந்துகளிலும் வாழ்ந்தான். அவனுக்கு ஆடையணி
கிடையாது. வெயில், மழைகளிலிருந்தும், குளிர் வெப்பங் களிலிருந்தும் தன்னைப்
பாதுகாத்துக் கொள்ள, அவன் இலை தழைகளையே பயன்படுத்தினான்.
பயிர்த்தொழிலோ, சமையல் தொழிலோ அந்நாளில் இல்லை.
 
     அவன் தீயைக் கண்டு பயன்படுத்தக் கற்றிருக்கவில்லை. இத்தகைய நாகரிகப்
படியை வரலாற்றாசியர் குகை மனிதர் காலம் என்பர்.
 
     மனிதனின் மிகச் சிறந்த அறிவுக் கருவியான மொழி இக்காலத்தில்
உருவாகவில்லை. அது சைகையாகவும் கூச்சலாகவுமே இருந்தது. தற்கால மொழிகளில்
இக்கூச்சல்களே வியப்பிடைச் சொற்களாக இருக்கின்றன.