பக்கம் எண் :

22

 
     இத் தொடக்க காலத்திலிருந்து மனிதன் ஒவ்வொன்றாக நாகரிக சாதனங்களைக்
கண்டுபிடித்து முன்னேறினான். அவன் கையாண்ட கருவிகளின் முன்னேற்றத்தை
அடிப்படையாகக் கொண்டு, வரலாற்றாசிரியர் இவ்வளர்ச்சியைப் பல காலங்களாக
வகுத்துள்ளார்கள். அவை பழங்கற்காலம், புதுக் கற்காலம், செம்புக் காலம், வெண்கலக்
காலம், இரும்புக் காலம் என்பவை.
 
     மனிதன் கல்லைத் தேவையான வடிவில் உடைத்து கத்தி, கோடாலி முதலிய
கருவிகளை ஆக்கிய காலம் பழங்கற்காலம். இதைச் செப்பம் செய்து உருவாக்கிய காலம்
புதுக் கற்காலம். இம் முன்னேற்றங்களுக்குப் பதினாயிரக்கணக்கான ஆண்டுக் காலம்
தேவையாயிற்று. அக்காலத்துக்குள் அவன் வாழ்க்கைத் துறையில் வேறு பல
கூறுகளிலும் வளர்ச்சிகள் ஏற்பட்டன. உலோகங்களைக் கண்டு பிடித்தபின் அவன்
இன்னும் வேகமாக முன்னேறினான். இரும்புக்கால வளர்ச்சியே இன்னும் நடை பெற்று
வருகிறது.
 
ஐந்திணை
 
     மனித நாகரிக வளர்ச்சியைத் தொல்காப்பியர் இன்னொரு வகையில் வகுத்துக்
காட்டுகிறார். மனித வாழ்க்கைப் பண்புகள் வாழ்க்கைக்கு அடிப்படையான நிலத்தின்
இயல்புக்கேற்ப ஐந்திணைகளாக வகுக்கப்பட்டன. அவை மலைப் பகுதி, காட்டுப் பகுதி,
பாலைவனம், ஆற்றுவெளி, கடற்கரை ஆகியவையே. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம்,
நெய்தல் ஆகிய ஐந்துமலர்ப் பெயர்களே திணைப் பெயர்களாக அமைந்தன.
 
     மனித நாகரிகம் தொடங்கியது மலைப் பகுதியிலேயே. குகையிலே குடிவாழ்வின்
வித்தான குடும்ப வாழ்வு தொடங்கிற்று. மக்கள் இங்கே குறவர் எனப்பட்டனர்.
அவர்கள் தொழில் வேட்டையாடுதல். நரிப்பல், புலிப்பல், நிறக்கற்கள் முதலியன
இப்பருவத்தில் அணிகலன்களாக வழங்கின. இறைச்சியும், கிழங்கும், தீக்கல்லால்
எழுப்பப்பட்ட தீயில் சுட்டு உணவாக உண்ணப்பட்டன.