பக்கம் எண் :

26

 
நாகரிகங்கள் கிரேக்க உரோம நாகரிகங்களும், தென்னாட்டு நாகரிகமுமே யாகும்.
கிரேக்க உரோம நாகரிகங்கள் மேனாட்டுக்கு ஒளி தந்தன. தென்னாடு கீழ்த் திசையில்
சிந்து கங்கை சமவெளி வாயிலாக இதுவரை ஒளி வீசியுள்ளது; நேரடியாக இன்னும் ஒளி
வீச இருக்கிறது என்னலாம்.
 
      பழங்கற்கால மனிதன் நாகரிகம் தென்னாட்டில் கி.மு. 40,000-வது ஆண்டுக்
காலத்துக்குரியது என்று கூறப்படுகிறது. அதாவது அது 42,000 ஆண்டுகளுக்கு
முற்பட்டது. தென்னாடு முழுவதும்-சிறப்பாகக் கடப்பை கர்னூல் பகுதிகளிலும் அதன்
தெற்கிலும். அதன் சின்னங்களை நாம் காண்கிறோம். அதே சமயம் தென்னாட்டுக்கு
அப்பாலுள்ள சிந்து கங்கை சமவெளியில் நாம் அவற்றை அவ்வளவாகக்
காணமுடியவில்லை. ஆனால் புதுக் கற்காலச் சின்னங்கள் தென்னாட்டிலும் சிந்து கங்கை
வெளியிலும் ஒரேபடியாகக் காணக் கிடக்கின்றன. இதனால், பழங்கற்காலத்தில் மனித
நாகரிகம் தென்னாட்டிலேயே தோன்றி வளர்ந்தது என்றும், புதுக் கற்காலத்தில் அது
தென்னாட்டின் வடஎல்லை தாண்டி இமயமலைவரை ஒரே பரப்பாகப் பரந்து விரிவுற்றது
என்றும் அறிகிறோம்.
 
     இன்று தென்னாட்டில் காணப்படாத பல விலங்கினங்களும் உலகிலேயே
இக்காலத்தில் மரபற்று அழிந்து போன விலங்குகளும் பழங்கற் காலத்தில்
தென்னாட்டில் இருந்திருக்கவேண்டும். விந்தியமலைப் பகுதிகளில் நமக்கு இவற்றின்
எலும்புக் கூடுகள் அகப்படுகின்றன. இவ்வெலும்புகளின் அருகிலேயே குகை மனிதன்
அல்லது பழங்கற்கால மனிதன் கரித்துண்டு கொண்டு வரைந்த இவ்விலங்குகளின்
கல்லாச் சித்திரங்கள் தென்படுகின்றன. இவற்றுள் மரபற்றுப் போன காண்டா மிருகம்
போன்ற விலங்கு, *பைம்மா, மான், குதிரை, யானை, ஆகியவற்றின் வேட்டைக்
காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன.

* கங்காரு (Kangaroo) இன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகிற விலங்கு.