பக்கம் எண் :

38
 
பன்னிரண்டு பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம் செய்யப்படுகிறது. ஆனால்
மொகஞ்சதரோவில் செம்பில் 100-க்கு 22 பங்கு வெள்ளீயம் சேர்த்து வெண்கலம்
செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சதரோவின் வெண்கலக் கலவையே சிந்து கங்கை
வெளியில் கி.மு. 4-ம் நூற்றாண்டுவரை வழங்கியதாக அறிகிறோம்.
 
     சிந்துவெளி மக்கள் பலவகை மழிக்கும் கத்திகளைப் பயன்படுத்தியிருந்தனர்.
அவர்கள் தாடி வைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீசையுட்பட முகமுழுதும் உடலும்
மழித்தனர். ஆண், பெண் இருபாலரும் கண்ணுக்கு மையிட்டனர். செங்காவிப் பொட்டு
நெற்றிக்கு இடப்பட்டது. மேசை நாற்காலி போன்ற பீடங்கள் வீடுகளில் இருந்தன.
பெரும்பாலும் செல்வர் வீடுகளுக்கு மாடிகள் இருந்தன. இரம்பம், தோல் அறுக்கும் உளி
ஆகியவையும், வாள், ஈட்டி, அம்புமுனை ஆகிய வேட்டைக்கான கருவிகளும்
காணப்படுகின்றன. போர், போர்க்கருவிகளுக்கான அடையாளம் எதுவும் காணவில்லை.
ஆனால் ஹரப்பாவில் நகரில் வெளியரண் ஒன்று இருக்கிறது. சிந்துவெளி நகரங்கள்
யாவும் கோட்டை சூழ்ந்தவையே என்பதை இது காட்டுகிறது. வீடுதோறும்
பெண்களுக்கும் விருந்தினருக்கும் சமையலுக்கும் தனியிடம் இருந்தது. பெரிய வீடுகளில்
காவலர்க்குத் தனியிடம் இருந்ததாகத் தெரிகிறது.
 
     தூண்டில் முள், கொட்டாப்புளி, இழைப்புளி, சுத்தி, துளையிடு கருவி, நெசவாளர்
கருவிகள், துணிதுன்னும் ஊசி, தந்த ஆடைமாட்டி, கொண்டை யூசி, எலும்புப்
பொத்தான்கள், முகக் கண்ணாடி ஆகியவை சிந்துவெளி மக்களின் உயர் இன்ப
வாழ்க்கைக்கான சின்னங்கள். நீள் சதுர வடிவுடைய செப்புத் தகடுகள் பல உள்ளன.
இவை நாணயங்கள் என்று கருதப்படுகிறது. இவையும் நிறைகோல், படிக்கற்கள்,
அளவுகோல், முத்திரைகள் ஆகியவையும், வாணிக வாழ்வுக்குரிய அடையாளங்கள்.
இலக்கமிடப்பட்ட பல் பொருள்களும் உள்ளன. அவை அரசியலுக்கு உரிமைப்பட்ட
பொருள்களாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.