பக்கம் எண் :

49
 
     தமிழகத்துக்கு வெளியே இந்தக் குடியரசர்கள் முடியரசர்களுக்கு முற்பட்டவர்கள்.
சளுக்கர் முதலிய பல பிற்கால முடியரசு மரபுகள் இக்குடியரசுகளிலிருந்தே வளர்ந்தன.
 
     தமிழகத்திலும் சேர சோழ பாண்டியர்கள் தொடக்கத்தில்
குடியரசர்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருத இடமுண்டு. பல குடியரசர்கள்
சேர்ந்தும், பல குடியரசர்களைவென்றும் அவர்கள் முடியரசர்களாயிருக்கக் கூடும்.
 
     பாண்டியருக்கு வழுதி, பஞ்சவர், பழயர், செழியர், கௌரியர் முதலிய பல
பெயர்கள் உண்டு. சோழருக்குச் செம்பியர், சென்னியர், வளவர், கிள்ளிகள் முதலிய
பெயர்களும், சேரர்களுக்கு வானவர், கொங்கர், வில்லவர், பொறையர், கோதைகள்,
குடவர், குட்டுவர் முதலிய பெயர்களும் இருந்தன. இவை அவர்களுக்கு உட்பட்ட
அல்லது அவர்களால் வெல்லப்பட்ட குடியரசுகளின் பெயர்களாயிருக்கலாம்.
 
     சேர அரசு கடைசிவரை குடியரசுகளின் இணைப்பு (confederation) ஆகவே
இருந்து வந்தது.
 
     பண்டைக் குடியரசுகளின் இணைப்புக்களில் ஒன்றுதான் ஆந்திர அரசு. அது
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பே பேரரசாக விளங்கிற்று.
 
     விந்தியமலைக்கு அப்பால் இக்குடியரசுகள் மூன்றாம் நூற்றாண்டு வரை
அழியாமல் இருந்தன. புத்தர் பிறந்த சாக்கியர் குடி, லிச்சாவி குடி ஆகியவை இவற்றுள்
சில.
 
     தொடக்ககால அரசு ஒரு சிறு எல்லைக்குட்பட்டது. அது முதலில் குடியரசாகவே
இருந்தது. நாட்டாண்மை முறையாக அது இன்றுவரை இருந்து வருகிறது. ஆனால்
குடியரசைத் தனிமனிதர் கைப்பற்றி வேளிர் ஆயினர். இவர்கள் பிற வேளிரை வென்று
முடியரசர் ஆயினர்.