படலம் படலமாகத் தொகுத்து எடுத்துக்காட்டும் ஒரு பெருங் காவிய ஏடாகத் திகழ்கின்றது. |
தென்னாடு என்ற பெயர் எப்போது என்ன பொருளில் வழங்கத் தொடங்கிற்று என்று வரையறுத்துக் கூறமுடியாது. 'தென்' என்ற சொற்பகுதி தெற்குத் திசையைக் குறிக்கக்கூடும்; இனிமை என்ற பொருளையும் குறிக்கக்கூடும். இவற்றுள் முந்திய பொருள் எது என்று கூற முடியாவிட்டாலும், இருபொருளும் தொடர்புடையன என்பது மட்டும் உறுதி. |
தென்னாட்டின் தென்கோடியிலுள்ளது தமிழகம். அதில் வழங்கும் தமிழ்மொழி, தென்மொழி என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் தென்கோடியிலுள்ள பாண்டி நாடு வரலாற்றுக் காலத்திலும் 'தென்னாடு' என்றே குறிப்பிடப்பட்டது. ஆகவே தென்னாடு என்ற பெயர் தெற்கிலிருந்து பரந்து வளர்ந்த ஒரு நாகரிக நாட்டைக் குறிப்பது என்று கூறத்தகும். வடதிசையில் மற்ற நாகரிகங்கள் புதிதாகத் தோன்றி வளர்ந்தபின், தென்னாடு என்ற இப்பெயரே வடநாடு, வடமொழி ஆகியவற்றினின்று இதனைப் பிரித்தறியவும் உதவியிருக்கக் கூடும். |
அதே சமயம் 'தென்' என்ற சொல்லின் மற்றப் பொருளும் தென்னாட்டு வாழ்வில் வேரூன்றிய பொருளேயாகும். அது 'தேன்' என்ற சொல்லுடன் தொடர்புடையது. தென்னாட்டிலுள்ள எல்லா மொழிகளின் பெயர்களும் இதே பொருளை உடையதாயிருக்கிறது என்று காணலாம். 'தமிழ்' என்ற பெயர் 'இனிமை' என்ற பொருளில் தமிழிலக்கியத்தில் வழங்குகின்றது. 'தெலுங்கு' என்ற பெயரின் பழைய வடிவம் 'தெனுகு' என்பதே. இது 'தேன் போன்ற மொழி' என்ற பொருளிலேயே வழங்கிற்று. இது போலவே 'கன்னடம்' என்ற சொல் 'கருப்பு' என்ற பொருள் தரும் 'கன்னல்' என்ற பகுதியின் திரிபேயாகும். மலையாளம் 'மலையம்' அதாவது 'தென்றல்' என்ற சொல்லிலிருந்தும், துளுவம் 'துளி' அதாவது, தேன்துளியிலிருந்தும், குடகம் என்பது |