கி.பி.3-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை நாம் பண்டைக்காலம் என்கிறோம். இந்தக் காலத்திய நிலைமை அறிய நமக்கு உதவும் இலக்கியம் தமிழ் இலக்கியம் மட்டுமே. இதில் தொல்காப்பியமும் திருக்குறளும் சங்க இலக்கியத்தில் சில பகுதிகளும் பழமை யெல்லை அறியப்படாத பழைய இலக்கியம் ஆகும். தொல்காப்பியமும் சில சங்க இலக்கியப் பகுதிகளும் கடைச்சங்கத்துக்கு முற்பட்டவை, அதாவது கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கு முந்தியவை. திருக்குறள் கி.பி. முதல் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட காலத்துக்குரியது. ஏலேலசிங்கன் மரபை ஏற்க முடியுமானால், அது கி.மு. 3-ம் நூற்றாண்டுக்குரியது என்னலாம். இவை நீங்கலான சங்க இலக்கியத்தின் பெரும் பகுதியும் கி.பி.2-ம், 3-ம் நூற்றாண்டுகளுக்கு உட்பட்டவை. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்கள் இக்காலத்தின் இறுதிக்கு உரியன. | நமக்குக் கிட்டிய இந்த இலக்கியப் பகுதிகளே தமிழிலக்கியத்தின் பழைமை, உயர்வு, பெரும் பரப்பு ஆகியவற்றுக்குச் சான்று பகர்வன. கிட்டாத முத்தமிழ்ப் பேரிலக்கியப் பரப்பை உய்த்துணரச் சிலப்பதிகார உரை உதவுகிறது. | தென்னாட்டு இலக்கியங்களில் புத்த சமண காலங்களுக்கு முற்பட்ட இலக்கியம் தமிழில் மட்டுமே இருக்கிறது. புத்த சமண இலக்கியமும் ஏராளம். சைவ, வைணவ இலக்கியங்களும் பிற காலத்தில் மிகுதி கன்னடத்தில் 9-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட இலக்கியமே நமக்குக் கிடைத்துள்ளதாயினும், அதில் சமண கால இலக்கியம் இடம் பெறுகிறது. சைவ வைணவ இலக்கியங்களும் மிகுதி. பிற மொழிகளிலும் கங்கை சிந்து வெளிகளிலும் வைணவ கால இலக்கியம் மட்டுமே கிட்டுகின்றன. | | |
|
|