பார்த்தயர் ஆகியவர்களுடன், பஃலவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பஃலவர் என்ற இனத்தவரும் இருந்தனர். பல்லவர் இவர்களின் ஒரு பிரிவினரே என்பர் ஒரு சாரார். ஆனால் அவர்கள் ஆந்திரப் பேரரசிலேயே சிற்றரசாயிருந்தனர் என்று அறிகிறோம். அத்துடன் அவர்கள் கொடியின் சின்னம் ஏறத்தாழச் சோழர்களின் புலிக்கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி, பல்லவர் சோழருடன் தொடர்பு கொண்ட திரையரே யாவர். பல்லவர், திரையர், தொண்டைமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒரு பொருட்சொற்கள் ஆகும். முதல் தொண்டைமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான். அவனுக்கும் முதல் பல்லவனுக்கும் உள்ள தொடர்பு விளங்கா விட்டாலும் இருவரும் தொடர்புடையவரல்லர் என்று கூற இடமில்லை. |
'தோட்டி முதல் தொண்டைமான்வரை' என்ற மரபுரையில் தொண்டைமான் என்ற சொல் இன்றும் தமிழ் வழக்கில் உள்ளது. |
காடு கொன்று தொண்டைக்காட்டை நாடாக்கிய கரிகாலன் செயலையும் தொண்டைமான் இளந்திரையன் புகழையும், தொண்டை நாட்டின் தமிழகப் பகுதியும் தெலுங்கு நாட்டுப் பகுதியும் இன்னும் நினைவில் கொண்டுள்ளன. கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வலியுறுத்துகின்றன. சோழர் தொடர்பை இது எடுத்துக்காட்டுகிறது. வடபுலப் புடைபெயர்ச்சியால் ஆந்திரப் பேரரசும், களப்பிரரால் சோணாடும் நிலைகுலைந்த சமயம் பல்லவர் எளிதில் புதிய ஆட்சி பிறப்பித்துப் பரவியிருத்தல் இயல்பே. |
இதே சமயம் திரையர்குடி மூலம் பல்லவர் ஆந்திரருடனும் தொடர்புடையவராயிருத்தல் வேண்டும். ஆந்திரரின் தலைநகரம் கோதாவரிக்கருகிலுள்ள அமராவதியாயினும் தொடக்கத்தில் அவர்கள் துங்கபத்திரைக்கருகிலுள்ள அண்டிரா ஆற்றங்கரையிலிருந்தவர்களே என்பது மேலே குறிக்கப்பட்டது. |