பக்கம் எண் :

76
 
     மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தென்னாட்டு வரலாற்றில்
பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றனர். அவர்கள் முதலில் ஆந்திரப் பேரரசின்
எல்லையைக் கைக்கொள்ள முயன்று, வடக்கே புதிதாய் எழுந்த கடம்பர், சாளுக்கியர்
ஆகியவர்களுடனும், மேற்கே கொங்கு அரசர் அல்லது மேலைக்கங்க மரபினருடனும்
போராடினர். ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல
தடவை மோதிக்கொண்டனர்.
 
     பல்லவர்களில் முதல்வனான பப்பன் ஆந்திர அரசரின் வீழ்ச்சிக் காலத்தில்
அவர்கள் கீழிருந்து ஆண்டு தென்பகுதியில் தன் ஆட்சிக் கொடியை உயர்த்தியவன்.
அவன் காலம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. நான்காம்
நூற்றாண்டின் முதற்பகுதியில் விஷ்ணுகோபன் காலத்தில் கங்கை வெளியின்
பேரரசனான சமுத்திரகுப்தன் காஞ்சிமீது படையெடுத்ததாகக் கூறப்படுகிறது.
இக்காலங்களில் பல்லவர், பாலாறு முதல் கிருஷ்ணாவரையுள்ள தொண்டை நாட்டுடன்
தற்போதைய கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்கள் அடங்கிய வேங்கி நாட்டையும்
ஆண்டதாக அறிகிறோம்.
 
     ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஆண்ட பல்லவ அரசன் முதலாம்
சிம்ஹவர்மன் ஆவன். இச்சமயம் சிற்றரசராகிய பாணமரபினர் தென்தொண்டை நாட்டில்
வலிமை பெற்று வந்தனர்.அவர்கள் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கத்துடன்
சிம்ஹவர்மன் ஹரிவர்மன் என்ற கங்க அரசனை ஆதரித்து அவனுக்குத்தானே
முடிசூட்டினான். இவன் காலத்தில் மைசூரிலுள்ள கங்க அரசர் மீது அவன் ஆதிக்கம்
பரவியிருந்தது என்பதை இதனால் அறிகிறோம்.
 
     ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல்லவருக்கும், அவர்களுக்கு வடக்கே
ஆண்ட சாளுக்கியருக்கும் பெரும் போராட்டம் தொடங்கிற்று.