இராசமல்லன் (974-1004) காலத்தில் அவன் அமைச்சனான சாமுண்டன் சிரவணபெல கோளாவிலுள்ள பெரிய சமணப் பாறைச் சிலைகளைக் கட்டுவித்தான். |
என்றுமே பேரரசரின் செல்லப் பிள்ளைகளாக இருந்த கங்கர் 11 ம் நூற்றாண்டுக்குப்பின் மீண்டும் குறுநில மன்னர் நிலையை அடைந்துவிட்டனர். இவர்களுள் பலர் நன்னிய கங்கசோடர் எனப் பெயர் பூண்டனர். 1180-ம் ஆண்டைய கல்வெட்டுக்களில் சீயகங்கன் அமராபரணன் என்ற சிற்றரசன் பெயர் காணப் படுகிறது. இவன் தந்தை கோவளாலபுரத்தின் இறைவனாகக் குறிக்கப்படுகிறான். தமிழில் நன்னூல் எழுதிய பவணந்தியை ஆதரித்த வள்ளல் இவனே என்று அறிகிறோம். |
விஷ்ணு குண்டினமரபு |
விஷ்ணு குண்டினமரபினர் கோதாவரி, கிருஷ்ணா ஆறுகளுக் கிடையிலுள்ள வேங்கை நாட்டை ஆண்டவர்கள். ஆந்திரப் பேரரசர் காலத்தில் இதில் ஆண்ட சாலங்காயன் மரபினரை ஒழித்து வாகாடகர் உதவியால் இவர்கள் 4-ம் நூற்றாண்டின் நடுவில் ஆட்சிக்கு வந்து, ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலைத்தனர். அதன்பின் அந்நாடு கீழைச்சாளுக்கியர் வசப்பட்டது. |
சாளுக்கியர் |
பல்லவ நாட்டுக்கு வடக்கே எழுந்த பேரரசுகளுள் வலிமை மிக்கது சாளுக்கிய அரசே. முற்காலச் சாளுக்கியர் கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தென்னாட்டின் வடமேற்குப் பகுதியை முதலில் பைத்தானிலிருந்தும், பின் வாதாபி அல்லது பாதமியிலிருந்தும் ஆண்டார்கள். |
முற்காலச் சாளுக்கியருள் முதல்வனான முதலாம் புலிகேசி (550-565) வாதாபியைக் கைப்பற்றி அதைத் தலைநகராக்கினான். அடுத்த அரசனான முதலாம் கீர்த்தி வர்மன் (566-597) கடம்பர்களை |