வென்று வனவாசியைக் கைப்பற்றினான். அடுத்த அரசன் மங்களேசன் (597-610) களசூரியரை வென்றான். கடைசி அரசன் இரண்டாம் புலிகேசி (610-642) காலத்தில் சாளுக்கிய அரசு பேரரசாய் உச்சநிலை அடைந்து அவ்வாட்சிக்குள்ளேயே வீழச்சியும் அடைந்தது. தொடக்கத்தில் வடக்கே கங்கை வெளியின் கடைசிப் பேரரசனான ஹர்ஷன் சாளுக்கிய அரசன்மீது படையெடுத்தான். புலிகேசி, ஹர்ஷனை வென்று புகழ் பெற்றான். ஆயினும் தெற்கே வளர்ந்து வந்த பல்லவர்களுக்கு அஞ்சி அவசர அவசரமாக உடன்படிக்கை செய்தான். ஆனால் 642-ல் பல்லவர் படைமுன் அவன் தோற்றான். வாதாபி மீண்டும் என்றும் நன்னிலையடையாதபடி அழிவுற்றது. சாளுக்கியப் பேரரசும் விழுந்தது. |
பதின்மூன்றாண்டு சாளுக்கிய அரசு குழப்பநிலையில் இருந்தது. பின் அது மேலைச்சாளுக்கிய அரசு, கீழைச் சாளுக்கிய அரசு என்று இரண்டு மரபுகளாக மீண்டும் மறுமலர்ச்சி யெய்திற்று. புலிகேசியின் புதல்வன் முதலாம் விக்கிரமாதித்தியன் மேலைச்சாளுக்கிய மரபின் முதல்வனாகவும், புலிகேசியின் இளவல் குப்ஜவிஷ்ணுவர்த்தனன் கீழைச்சாளுக்கியரின் முதல்வனாகவும் விளங்கினர். |
மேலைச் சாளுக்கியர் |
மேலைச்சாளுக்கிய அரசனான முதலாம் விக்கிரமாதித்தியன் (654-680) சோழரையும் கேரளரையும் மூன்று பல்லவரையும் வென்றான். வினயாதித்தியன் ஆட்சியில் (680-696) களப்பிரர், பல்லவருடன் போர் நீடித்தது. இரண்டாம் விக்கிரமாதித்தியன் (733-744) காஞ்சியையே பிடித்து அதைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக் கல்வெட்டுக்களில் கூறுகிறான். இரண்டாம் கீர்த்திவர்மன் (744-753) ஆட்சியில் தந்திதுர்க்கன் என்ற இராஷ்டிரகூட அரசன் அவன் நாட்டைக் கைக்கொண்டான். |