பக்கம் எண் :

     90
 
பயனாக இரண்டாம் இராசேந்திரன் (1063-1070) கீழைச்சாளுக்கிய அரசனாயிருந்து
கொண்டே 1070-ல் சோழ அரசுக்கும் உரிமையுடையவனாய், குலோத்துங்க சோழன்
என்ற பெயர் பெற்றான். கீழைச்சாளுக்கிய மரபு தனிமரபு என்ற முறையில் இத்துடன்
முடிவடைந்தது.
 
இராஷ்டிரகூடர்
 
     இராஷ்டிரகூட மரபினர் எட்டாம் நூற்றாண்டுக்குமுன் சிற்றரசாகவே இருந்தனர்.
இரண்டாம் இந்திரன் ஒரு சாளுக்கிய இளவரசியை மணந்திருந்தான். அடுத்த
அரசனாகிய தந்திதுர்க்கன் மேற்குச்சாளுக்கியரை வென்று பேரரசு நிறுவினான். இவன்
வெற்றிகள் 748, 758 ஆகிய ஆண்டுகளுக்குரிய கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன.
768, 772 ஆகிய ஆண்டுகளில் வாழ்ந்த முதலாம் கிருஷ்ணனே புகழ் பெற்ற
எல்லோராக் குகைச் சிற்பங்களை வகுத்தவன் என்று அறியப்படுகிறது. 783-ல் துருவன்
மேலைக்கங்க அரசன் சிவமாரனைச் சிறைப்படுத்தினான்.
 
     மூன்றாம் கோவிந்தன் (783-814) பெரும் போர்வீரன் கிழக்குச் சாளுக்கிய அரசன்
விஜயாதித்தியனுடன் அவன் செய்த போர்கள் மிகப்பல. அத்துடன் இவன்
குஜராத்தையும் கேரளத்தையும் வென்றான். குஜராத்தில் அவன்கீழ் ஆண்ட அவன்தம்பி
மூன்றாம் இந்திரன், பின்னால் தனிக் கூர்ஜர மரபு கண்டான்.
 
     முதலாம் அமோகவர்ஷன் (814-877) புதல்வி சங்காவைப் பல்லவ அரசன்
மூன்றாம் நந்திவர்மன் மணஞ் செய்து கொண்டான்.
 
     அமோகவர்ஷனுக்குப் பின்வந்த அரசர்கள் வலி குன்றியவராயிருந்தனர். கடைசி
இராஷ்டிரகூட அரசன் இரண்டாம் கர்க்கலன் அல்லது நாலாம் அமோகவர்ஷன் (972-3)
கீழைச்சாளுக்கிய மரபினனான தைலப்பனால் வீழ்த்தப்பட்டான். இராஷ்டிரகூட மரபு
இதனுடன் முடிவடைந்தது.