பக்கம் எண் :

     92
 
சமயம், மொழி, கலை, பண்பாடுகள்
 
     தென்னாட்டின் அரசர் பேரரசர் மரபுகளுள் பெரும் பாலானவை இக்கால முழுதும்
சமண சமயம் தழுவியவையாய் இருந்தன என்பது கவனிக்கத்தக்கது. பிற்காலப்
பல்லவரும், பிற்கால பாண்டியர் சிற்றரசராயிருந்த சோழரும், சோடகங்கரும் மட்டுமே
சைவ அல்லது வைணவ சமயம் தழுவியவராயிருந்தனர். கன்னட நாட்டில் களசூரி
மரபின் தோற்றம் வீரசைவ சமயத்தின் பிறப்பாகவே அமைந்தது.
 
     மொழித்துறையில் தமிழ் நீங்லாகத் தென் இந்திய மொழிகள் எவற்றுக்கும்
இவ்விடைக்காலத்தில்கூட இலக்கிய வாழ்வு ஏற்படவில்லை. கன்னடத்தில் கி.பி. 4ம்
நூற்றாண்டிலேயே இலக்கியம் இருந்ததென்பதற்கான சான்றுகள் தமிழ் நூல்களின்
மூலமே கிடைக்கின்றன. ஆனால் இன்று நமக்கு 9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட
இலக்கியமே கிட்டுகின்றது. தெலுங்கிலுள்ள பழைய கல்வெட்டுக்கள் 7-8 ம்
நூற்றாண்டுக்குரியவை. அவற்றால் அது அன்றே இலக்கிய வளம் உடையதாயிருந்ததாய்
அறிகிறோம். ஆனால் நமக்கு 12ம் நூற்றாண்டு முதலே தெலுங்கில் இலக்கியம்
கிட்டியுள்ளது.
 
இலக்கியம்
 
     மலையாளத்தில் 12ம் நூற்றாண்டு முதலே நமக்கு இலக்கியம் கிடைத்துள்ளது.
கன்னட நாட்டில் இக்கால இறுதியிலும், மலையாள, தெலுங்கு நாடுகளில் இது கடந்துமே
இலக்கியம் நமக்குக் கிட்டுகின்றது.
 
     கடைச்சங்க காலத்திலிருந்தே ஆந்திரர், பல்லவர் இலக்கியம் வளர்த்ததாக
அறிகிறோம். ஆந்திரர் புத்த சமயத்தினராதலால் பாளி இலக்கியமே பெரிதும் ஆதரவு
பெற்றது. அதுவும் நமக்கு இன்று கிட்டவில்லை. சாளுக்கியர், இராஷ்டிரகூடர்,
மேலைக்கங்கர் ஆகியவர் சமணராதலால், பிராகிருத இலக்கியம் பெருக்கினர்.