பக்கம் எண் :

(இ - ள்.) பெறுதற்கரிய பொருளைப் பகைவர் கொடுப்பத் தணிந்த கோபத்தோடு பேரணிகலங்களையுடைய மன்னன் மீண்டுபோதலும் அத்துறையாம் எ - று.

வ - று. கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப்
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான்-கோடி
நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
முதியமென் றாறி முரண்.

(இ - ள்.) பல வாச்சியத்தோடும் பொருந்தி முரசு அதிரக் கைக் கத்தரிகையிட்டு நறுக்கின தலையாட்டத்தினையுடைய பரிகள் முன்னே சதியாக நடக்க இருந்த பாசறையினை விட்டுப் பெயர்ந்தான், பலவேற் படையினையுடையான்; கோடிபொருளைத் திறையாக இவனுக்குப் பகை வருங் கொடுத்தார், அரசன்றன் அடிக்கீழ்ப் பழையோமென்று சொல்லி மாறுபாடொழிந்து எ - று.

மாறுபாடொழிந்து கோடிநிதியம் திறையளந்தார் நேராரு மென்க.

(10)

46. 1மாராய வஞ்சி

மறவேந்தனிற் சிறப்பெய்திய
விறல்வேலேலார் நிலையுரைத்தன்று.

(இ - ள்.) மாற்சரியத்தினையுடைய மன்னனாலே சிறப்புப்பெற்றவெற்றி மிக்க வேலினையுடையோர் நிலைமையைச் சொல்லியது எ - று.

வ - று. நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் -போரார்
நறவேய் கமழ்தெரிய னண்ணா ரெறிந்த
மறவே லிலைமுகந்த மார்பு.

(இ - ள்.) இனமொத்த முத்தாரங்களையணிந்தன; பெரிய? மேம்பாட்டினையும் பொருந்திய வீரக்கழலினையுமுடையான் பகைவர்தம் போரைப் பார்த்துக்கோபித்துக் கண்சிவப்பப் போர்வீரர் தேன்மேவிய நாறு மாலையினையுடைய சத்துருக்களெறிந்த மாற்சரியத்தான் மிக்கஇலைத்தொழிலையுடைய வேலை ஏற்றுக்கொண்ட மார்புகள் எ - று.

மறவேலிலைமுகந்த போரார் மார்பு நேராரம் பூண்டனவென்க; இனி நேராரம் பூண்டபோரார் மார்பு மறவேலிலை முகந்தன வென்றலுமொன்று.

(11)

47. நெடுமொழி வஞ்சி

ஒன்னாதார் படைகெழுமித்
தன்னாண்மை யெடுத்துரைத்தன்று.

(இ - ள்.) பகைவர் தஞ்சேனையைக் கிட்டித் தன்னுடைய ஆண்மைத் தன்மையை உயர்த்திச் சொல்லியது எ - று.


1. சிலப். 25:142; மாராயம்-அரசனாற் செய்யப்படுஞ் சிறப்பு.