இளம்பசி = சிறுபசி. இளம்பதம் = முற்றாநிலை, சிறிது வெந்த அல்லது காய்ந்த நிலை, இளவரசு பதவி. இளம்பறியல் = முற்றாத நிலையில் பறிக்குங் காய். இளம்பிறை = சிறுபிறை. இளமணற்பாய்தல் = மனமிளகி ஈடுபடுதல். இளமழை = சிறு பெயல்முகில். இளமார்பு = கருப்பூரவகை. இளமையாடுதல் = திரிபுணர்ச்சியுறுதல். “மந்தி....... இளமையாடி யிருக்கும் வனத்து” (சீவக. 2491) இளவடி = இளம்பதத்தில் வடிக்கை. இளவணி = காலாட்படை. “நின்ற இளவணி கலங்கி” (ஈடு. 7:4:1) இளவன் = ஒருவகை நஞ்சு. இளவாடை = வடக்கிருந்து வரும் மென்காற்று. இளவாளிப்பு = ஈரம். இளவிளவெனல் = பயிர் பசுஞ் செழிப்பாயிருத்தல். இளவுச்சி = நண்பகற்கு அணித்தான முற்பொழுது. இளவெந்நீர் = சிறிது சுடும் நீர். இளவெயில் = காலை வெயில். இளவெழுத்து = திருந்தா வெழுத்து. இளவேனில் = வெப்பம் முதிராக் கோடை. இள - இளை = இளைமை. K. ele. இளைச்சி = தங்கை. “அகில முண்டார்க்கு நேரிளைச்சி” (திருப்புகழ், 1037) இளைத்தல் = மெலிதல், சோர்தல், பின்னடைதல், வறுமைப் படுதல், வளங்குறைதல். இளைப்பு = சோர்வு, களைப்பு. இளைது = முதிராதது. இளைது - இளைசு - இளசு. |