பக்கம் எண் :

21

இளையர் = இளைஞர், வேலைக்காரர்.

இளையவன் = அகவையிற் குறைந்தவன், தம்பி.

இளையவள் = திருமகள்.

இளையன் = தம்பி.

இளையாள் = தங்கை, திருமகள், பின்முறை மனைவி.

இள் = எள்.

எள்ளல் = குறைவாய் மதித்தல், இகழ்தல்.

எள் = 1. மிகச் சிறு கூல வகை. 2. ஒரு சிற்றளவு (8 கடுகு). க., ம. எள். து. எண்மெ.

எள் - எண் = எள்.

“எண்ணெ ணுணவுப்பெயர்”    (தொல். எழுத்து. 308)

எண்மை = எளிமை.

எள்ள = இகழ, ஓர் உவமவுருபு.

“எள்ள விழைய இறப்ப நிகர்ப்ப”    (தொல். உவ.11)

எள் - எள்கு. எள்குதல் = 1. இகழ்தல். “எள்கலின்றி... ஈசனை வழிபாடு செய்வாள்” (தேவா. 1049 10). 2. கூசுதல், ஒடுங்குதல். “பழிவந்து மூடுமென் றெள்குதுமே.” (திருக்கோ. 92). 3. அஞ்சுதல். “எண்டிசை யோரும் எள்க” (சீவக. 1749). 4. வருந்துதல். “செங்களம் பற்றிநின் றெள்கும் புன்மாலை” (திவ்.இயற். திருவிருத். 77).

எள்கு - எஃகு, எஃகுதல் = நெகிழ்தல், அவிழ்தல், உருகுதல்.

எஃகு - உருக்கு, உருக்கினாற் செய்யப்படும் படைக்கலப் பொது.

ஒ. நோ : இள - இளகு.

எஃகுபடுதல் = இளகினநிலை யடைதல்.

“உருகக் காய்ச்சியெறிதற்கு எஃகுபட்டிருக்கும் உலையினையும்”     (சிலப். 15 210, உரை)

எள் - எளி. எளிதல் = எளிமையடைதல்.

“பொருதிறல் வன்மைய திலனா யெளிந்தான்”     (கந்த பு. அக்கினிமுகா. 90)

அளித்தல் = தாழ்த்திக் கூறுதல்.

“எளித்தல் ஏத்தல்”    (தொல். பொருள். 207)