செம் + படு = செம்படு - செப்படு. செப்பட = செவ்விதாக. “செப்பட முன்கை யாப்ப’’ (சீவக. 2665). செம் + ஆ = செம்மா. செம்மாதல் = செம்மையாதல். “என் கண்ணன் கள்வ மெனக்குச் செம்மாய் நிற்கும்’’ (திவ். திருவாய். 9:6:6). செம்மன் = காவிநிறமுள்ள திருக்கை மீன்வகை. செம்மல் = 1. வாடிச் சிவந்த பழம்பூ. “உதிர்ந்த ..... செம்மல் மணங்கமழ’’ (சிலப். 7 பாடல், 39). 2. பெருமை, தலைமை. “அருந்தொழில் முடித்தசெம்மற் காலை’’ (தொல். கற். 5). 3. வலிமை (பிங்.). 4. தருக்கு. “செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்’’ (குறள். 880). 5. பெருமையிற் சிறந்தோன் தலைவன் (திவா.). 6. பெருமை யுள்ள மகன். “பருதிச் செல்வன் செம்மலுக்கு’’ (கம்பரா. அனும. 18). 7. இறைவன் (திவா.). 8. சிவன் (சூடா.). ம. செம்மு. தலைவன் அல்லது அரசன் செம்மல் எனப்பட்டது, நேர்மையான ஆட்சியால்; சிவன் செம்மல் எனப்பட்டது செந்திறத்தால். செம்மாத்தல் வீறுபெறுதல். “அண்ணல் செம்மாந் திருந்தானே’’ (சீவக. 2358). 2. இறுமாத்தல். “மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்’’ (குறள். 1074). செம் - செம்பு = 1. தாம்பரம். “செம்பிற் செய்நவும்’’ (சிலப். 14:174). 2. செம்பினாற் செய்த குடிநீர்க்கலம். 3. ஒரு முகத்தலளவு. ம. செம்பு, க. செம்பு, கெம்பு. செம்பு - செம்பை = ஒருவகைப் பூச்செடி. செம்பு - செப்பு = 1. செம்பு. 2. செம்பினாற் செய்த நீர்க்கலம். “சேமச் செப்பிற் பெறீஇயரோ’’ (குறுந். 277). 3. சிமிழ். “செப்பின்புணர்ச்சிபோற் கூடினும்’’ (குறள். 887). ம. செப்பு. செப்பு - செப்பம் = 1. செம்மை. “செப்பமும் நாணு மொருங்கு’’ (குறள். 951). 2. நடுநிலை. “செப்பம் உடையவ னாக்கம்’’ (குறள். 112). 3. ஒக்கிடுகை. குடையைச் செப்பஞ் செய்ய வேண்டும் (உ. வ.). 4. செவ்வையான பாதை. “சேந்த செயலைச் செப்பம் போகி’’ (மலைபடு. 160). 5. செவ்வையான தெரு (பிங்.). செப்பு - செப்பல் = செந்நிறம். “பொழுது செப்பலோடிவரும் பொழுது’’ (யாழ்ப்.). 2. அருணன் எழும் நேரம். செப்பம் - செப்பன். செப்பனிடுதல் = செவ்வை செய்தல், ஒக்கிடுதல், பழுதுபார்த்தல், புதுப்பித்தல். |