சொல் தென்சொல்லே யென்று தம் “சமற்கிருத மொழி” (Sanskrit Language) என்னும் நூலிற் பின்வருமாறு குறித்திருத்தல் காண்க. ‘‘Pinda ‘lump, clod’: Ka, petta, pette, pente, hente, hende, clod, lump of earth,’ Te, pedda, pella ‘id’, pendali ‘a lump or mass’, Ka., Te, pindu ‘to squeeze together.’’ ஒ.நோ.: பிழி. பிழிதல் = உள்ளிருக்கும் நீர்ப்பொருள் வடியுமாறு, ஒன்றை இறுக்கிப் பிடித்தல். பிண்டம் அல்லது பிண்டி என்பது வடசொல்லாயின், பிடி என்னும் வினைச்சொல்லும், அதன் நூற்றுக்கணக்கான திரி சொற்களும் கூட்டுச்சொற்களும் வடசொல்லாம். பிடி என்பது, குமரி நாட்டில் தோன்றிய அடிப்படைத் தமிழ்ச்சொற்களுள் ஒன்றாதலாலும், இருக்குவேதம் மிகப் பிற்காலத்ததாதலாலும், பிண்டம் அல்லது பிண்டி என்பது தென்சொல்லே யென்பது தெரிதரு தேற்றமாம். |