பரிதிபாகை = வானநூ லளவைவகை (W.). பரிதி வட்டம் = கதிரவன் மண்டலம். “வெங்கதிர்ப் பரிதி வட்டத் தூடுபோல் விளங்கு வாரே” (திவ். பெரியதி. 4 5 10). புர் - புரு - புருவு - புருவம் = 1. கண்களின் மேலுள்ள மயிர் வளைவு. “கொடும்புருவங் கோடா மறைப்பின்” (குறள். 1086). 2. புண்விளிம்பு (W.). 3. செய்வரப்பு (W.). புருவம் - வ. ப்ருவ (bhruva). Cf. E. brow = arch of hair over eye, OE. bru, ON. brur, eyebrow. புரு - புருள் - புருளை - புருடை = முறுக்காணி. ஒ.நோ.: உருள் - உருளை - உருடை - ரோதை - L. rota, wheel. புருடை - பிருடை = 1. முறுக்காணி (W.). 2. புட்டியடைக்குந் தக்கை. 3. சுழலாணி (சங். அக.). தெ. பிரட (b), க. பிரடெ (d). பிருடை - பிரடை = 1. முறுக்காணி (W.). 2. முறுக்காணி வில்லை. தெ. பிரட, க. பிரடெ. புல் - புள் - பள் - பண்டு - பண்டி = 1. சக்கரம். 2. வண்டி “செந்நெற் பகரும் பண்டியும்” (சீவக. 61). 3. சகட நாண்மீன் (சூடா.). தெ., க. பண்டி. பண்டி - பாண்டி = 1. கூடாரப் பண்டி (சிலப். 14 168, அரும்.). 2. மாட்டுவண்டி. “அகவரும் பாண்டியும்” (பரிபா. 10 16). 3. வட்டமான வட்டு அல்லது சில். 4. நிலத்திற் கீறிய கட்டங்களில் வட்டெறிந்து நொண்டி விளையாடும் (பாண்டிநாட்டு) விளையாட்டு. 5. காளை அல்லது எருது (பரிபா. 20 குறிப்பு). பாண்டி - பாண்டில் = 1. வட்டம் (திவா.). “பொலம்பசும் பாண்டிற் காசு” (ஐங். 310). 2. தேர்வட்டை (சிலப். 14 168, உரை). 3. இரு சக்கர வண்டி, “வையமும் பாண்டிலும்” (சிலப். 14 168). 4. குதிரை பூட்டிய தேர் (திவா.). “பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பிணர்த் தடக்கை” (நற். 141). 5. வட்டக் கட்டில். “பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்” (நெடுநல். 123). 6. வட்டத்தோல். “புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் |