தெஞ்சிய திகழ்விடு பாண்டில்” (பதிற். 74). 7. வட்டக் கண்ணாடி. “ஒளிரும்....... பாண்டில் நிரைதோல்” (பு. வெ. 6 12). 8. வெண்கலத் தாளம். “இடிக்குரல் முரச மிழுமென் பாண்டில்” (சிலப். 26 194). 9. கிண்ணி, “சுழற்பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே” (புறம். 97). 10. விளக்குத் தகழி (பிங்.). 11. குதிரைச் சேணம். “பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா” (பதிற். 90 35). 12. குண்டை (காளை). “மன்னிய பாண்டில் பண்ணி” (சீவக. 2054). 13. விடையோரை (இடபராசி) (திவா.). 14. வட்டப் பாதமுள்ள விளக்குத் தண்டு. “நற்பல பாண்டில் விளக்கு” (நெடுநல். 175). 15. வட்டாரம், மண்டலம், நாடு (W.). பாண்டி - பாண்டியம் = 1. எருது. “செஞ்சுவற் பாண்டியம்” (பெருங். உஞ்சைக். 38 32). 2. எருது கொண்டுழும் உழவு அல்லது பயிர்த்தொழில். “பாண்டியஞ் செய்வான் பொருளினும்” (கலித். 136). பாண்டி - பாண்டியன் = காளை யொத்த மறவன். “மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து” (குறள். 624) “அச்சொடு தாக்கிய பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ” (புறம். 90) “நிரம்பாத நீர்யாற் றிடுமணலு ளாழ்ந்து பெரும்பார வாடவர்போற் பெய்பண்டந் தாங்கி மருங்கொற்றி மூக்கூன்றித் தாடவழ்ந்து வாங்கி” (சீவக. 2784) உழைப்பது காளை. காளை = 1. இளவெருது. 2. கட்டிளமைப் பருவத்தினன் (திவா.). 3. ஆண்மகன் (திவா.). 4. பாலைநிலத் தலைவன் (திவா.). 5. மறவன். “உரவுவேற் காளையும்” (புறம். 334). முதற் பாண்டியன் அவன் காலத்திற் பண்டையனாயிருந்திருக்க முடியாதாதலால், பண்டு என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் வேந்தன் குடிப்பெயரைத் திரித்து, பழைமையானவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது. பாண்டியன் நாடு என்பது பிற்காலத்திற் பாண்டிநாடென மருவிற்று. |