பக்கம் எண் :

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்             (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். கூற்றனார் என்பது கூத்தனார் என்றும் காணப்படுகின்றது. இளம்பால் என்பது ஓர் ஊர்ப்பெயர் என்பர். சேந்தன் என்பது இவர் தந்தை பெயராக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நூல் :அகம் 102, 348, நற்றிணை 273.

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்         (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரால் தொடர்ந்த பெயர் கொண்ட சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் மதுரை மேலைக்கடைக் கண்ணம் புகுந்தா ராயத்தனார் என்றும் காணப்படுகின்றது. இப்பெயரைக் கொண்டால் இப்புலவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மேலைக் கடையத்தில் பிறந்து மதுரையில் வந்து வாழ்ந்தவராகலாம். ஓலைக்கடை என்று கொண்டால் ஓலையாற் பின்னப்பட்ட பொருள்களை விற்கும் வாணிகர் என்று கருதலாம்.

நூல் :புறம்; 350.

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்              (சங்ககாலம்)

ஊர் :மதுரை

இவர் ஊரொடு தொடர்ந்த சங்கப் புலவர்களுள் ஒருவர். இவரது பெயரினால் இவர் பெண்பாற் புலவராக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

நூல் :நற்றிணை 250, 369.