பக்கம் எண் :

5

மகுமுதிப்றாஹிம்லப்பை (19 நூ)

நூல்:ஒலிநாயகரவதாரச் சிந்து.

இந்நூல் முகியித்தீனாண்டகையவர்களின் இயற்கையும் செயற்கையுமாகிய நிகழ்ச்சிகளைக் கூறுவது. சிந்துப் பாடல்களோடு விருத்தம் முதலியனவும் கலந்து வந்துள்ளன; 104 செய்யுட்களை உடையது.

மகேசகுமார சர்மா (20 நூ)

நூல் :ஆநந்த மடம் (தமிழாக்கம்), நிர்மலா.

ஆநந்தமடம்:- பங்கிம் சந்திரர் வங்க மொழியில் இயற்றிய நூலின் தமிழாக்கம்.

மங்கைபாகக் கவிராயர் (19 நூ)

வாழ்விடம் :பாண்டிய நாட்டில் மிதிலைப்பட்டி.
நூல்:‘கொடுங்குன்ற புராணம்; ‘வருக்கக்கோவை’.

வருக்கக் கோவை:

நத்தம் பெருநிலக்கிழார் முடிலிங்கைய நாயகர் குமாரர் சொக்கலிங்க நாயகர் மீது பாடப்பெற்றது. இந்நூல் பாடியமைக்காகப் பூசாரிப்பட்டி என்னும் ஊரை நன்கொடையாகப் பெற்றார். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.

மங்கைவாழ் கவி (19 நூ)

ஊர் :பாளையங்கோட்டை

இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனியார்க்கும் நிகழ்ந்த போர்களை நேரில் கண்டவர். அந்நிகழ்ச்சிகளைக் கும்மிப் பாடல்களாகப் பாடியுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு அஞ்சாமல் இக்கும்மிப் பாடல்களைப் பாடிச் சிறைத்தண்டனை பெற்றார்.

நூல்:பாஞ்சாலங்குறிச்சிப் போர் நிகழ்ச்சிக் கும்மிப்பாடல்கள்.