பக்கம் எண் :

12மதுரை வீரன் கதை

  
     எடுத்துரைத்தான். வீரனும் மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். குட்டியாட்டுத்
தோலில் ஒரு நாழிகைக்குள் அழகான செருப்பு ஒன்றை அமைத்தான். தந்தையிடம்
கொடுத்தான்.

     பொம்மண நாயக்கன் தேவையான சடங்குகளைச் செய்தான். குடிசையை எரித்து
விட்டு பொம்மியை வீட்டிற்கு அழைத்து வந்தான். பொம்மி தன்னைப் பூரணமாக
அலங்கரித்திருந்தாள். சின்னான் வந்து செருப்பைக் கொடுத்தான். செருப்பை கண்ட
பொம்மி இது வீரன் வேலை என்று எண்ணி மகிழ்ந்தாள். திருஷ்டி கழித்து பொம்மிக்குச்
சித்திரை மாதம் சிறப்பாக சடங்கு செய்தான்.

     சடங்குக்கு அனைத்து மன்னர்களும் அழைக்கப்பட்டனர். வந்தோர்க்கெல்லாம்
விருந்தை வகையாகப் படைத்தான் மன்னன். அறுசுவை உணவை அரசர்கள் சுவைத்தனர்.
உண்டதும் வெற்றிலை பாக்கும் இட்டு, சந்தனம்பூசி, பூ வைத்து மகிழ்ந்தனர்.

     அப்போது வீரனும் சின்னானும் விருந்து மண்டபத்தை அடைந்தனர். அரசன்
அவர்களுக்கு அன்னம் படைக்குமாறு ஆணையிட்டான். பொம்மி, வந்தவர் யாரென்று
விசாரித்தாள். நல்ல உணவு எடுத்து படைக்குமாறு கூறினாள்வீரனும் உண்டு மகிழ்ந்தான்.

     வீட்டுக்கு வந்த வீரன் விரகத்தால் வேதனைப்பட்டான். எப்படியாவது பொம்மியைப்
பார்க்கத் துடித்தான். வளர்த்தவர்கள் அறியாமல் எழுந்தான் கோட்டைக்கு வந்தான்.
அனுமார் போல் கோட்டைக்குள் குதித்தான் ஈபோல் நுழைந்தான். பொம்மி வீரனைக்
கண்டு வியந்து போற்றினாள். இருவரும் கூடிக் கலந்தனர்-களித்தனர்.

     பொம்மி வேண்டிய ஆபரணங்களை எடுத்துக் கொண்டாள். வீரன் கூடாரம்,
குதிரை. வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டான். இருவரும் குதிரை ஏறி வேகமாகச்
சென்றனர். கோனேரி ஆறு கடந்து, ஆமூர் வழியாக சென்று ஒரு ஆற்றங்கரையில்
கூடாரம் இட்டனர், கூடிக் களித்தனர்.