பக்கம் எண் :

101

வந்தனர். ஆதலினால்-தொழில்
     வளர்ந்தது நாட்டினிலே.

காலையில் மாலையிலே-சேர்ந்து
     கடவுளைத் தொழுதுவந்தார்.
வேலையை மதியாத-ஒரு
     வீணரும் அங்கேஇல்லை.

ஹரிஜன மக்களுக்கும்-காந்தி
     அங்கே இடம்அளித்தார்.
சரிசமம் யாவருமே-அங்கே
     சாதிகள் ஏதும்இல்லை.

உண்மையே பேசுவது-எல்லா
     உயிரையும் போற்றுவது
கண்ணென இவ்விரண்டை-காந்தி
     கருதிட வேண்டுமென்றார்.

காந்தி மகானுடனே- அன்னை
     கஸ்தூரி பாயும்அங்கே
சேர்ந்தே உழைத்தனராம்-உயர்
     சேவைகள் செய்தனராம்.