“அந்நியர் இன்னமும் ஆளுவதோ-இந்த அநியாயம் தன்னைச் சகிப்பதுவோ? இந்திய நாடுநம் இந்தியர்க்கே”-என்று இடிபோல் முழங்கினர் யாவருமே. கொடியுடன் ஊர்வலம் வந்தனரே-எங்கும் கூட்டங்கள் கூட்டியும் பேசினரே. தடியடி குண்டுகள் யாவையுமே-அவர் தாங்கிட முன்வந்து நின்றனரே. குண்டாந் தடிக்குமே அஞ்சவில்லை-பொல்லாக் குண்டு வெடித்துமே ஓடவில்லை. “இன்றேஎம் பாரத நாட்டைவிட்டு-நீங்கள் ஏறுவீர் கப்பலில்” என்றனரே. “வந்த வழியிலே சென்றிடுவோம்-வேறு வழியில்லை. மக்கள் விழித்துவிட்டார்” என்ற முடிவுக்கு வந்தனரே-நம்மை இருநூறு ஆண்டுகள் ஆண்டவர்கள். சிறையில் இருந்தோர் அனைவரையும்-உடன் திறந்த வெளியில் அனுப்பினரே. அருமைத் தலைவர்கள் கைகளிலே-நாட்டின் ஆட்சியைத் தரவும் இசைந்தனரே. | | |
|
|